ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் லையன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லையன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசினார். இதன்மூலம் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு சாதனைப்பட்டியலில் இடம்பிடித்தார். அதாவது ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 சிக்சர்களை கடந்த 3ஆவது வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் தற்போது வரை 26 வீரர்கள் 100 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 சிக்சர்களை எட்டிய வீரர்கள் யார் யார்?
பொல்லார்டு(1094 பந்துகள்):
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் பொல்லார்டு. இவர் 182 போட்டிகளில் விளையாடி 218 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவர் முதல் 100 சிக்சர்களை 1094 பந்துகளில் விளாசி அசத்தியிருந்தார்.
ஹர்திக் பாண்ட்யா(1046 பந்துகள்):
ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரராக ஹர்திக் பாண்ட்யா இருந்தார். இந்த தொடரில் இவர் குஜராத் லையன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளார். இவர் தற்போது வரை 96 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 100 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவர் 1046 பந்துகளில் 100 சிக்சர்களை அடித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கிறிஸ் கெயில்(943 பந்துகள்):
ஐபிஎல் வரலாற்றில் அதிரடி மன்னராக வலம் வந்தவர் யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில். ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இவர் தன்வசம் வைத்துள்ளார். இவர் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்கள் அடித்துள்ளார். அதில் முதல் 100 சிகர்களை இவர் 943 பந்துகளில் அடித்துள்ளார்.
ஆண்ட்ரே ரஸல்(657 பந்துகள்):
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு அதிரடி ஆட்டம் மூலம் கை கொடுக்கும் வீரர்களில் ஒருவர் ரஸல். இவர் தற்போது வரை 89 போட்டிகளில் 155 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவர் முதல் 100 சிக்சர்களை மிகவும் அதிவேகமாக அடித்துள்ளார். இவர் 657 பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அதிவேகமாக 100 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்