ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டனஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மட்டும் அரைசதம் கடந்து அசத்தினார். மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதைத் தொடர்ந்து 157 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸ் 4 ரன்களுடனும் முதல் ஓவரில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து நிதிஷ் ரானாவும் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் கொல்கத்தா அணி 5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கூ சிங் ஒரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழுவதை தடுத்தனர். ரிங்கூ சிங் 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது யாஷ் தயல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடி வந்த வெங்கடேஷ் ஐயரும் 17 ரன்களில் ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 50 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்திலிருந்த ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவரும் உமேஷ் யாதவும் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தனர். இதனால் கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் ரஸல் ஒரு சிக்சர் அடித்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தை ரஸல் சிக்சர் அடித்து அசத்தினார். எனினும் இரண்டாவது பந்தில் ரஸல் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 148 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்