ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி இணைந்துள்ளார். இது தொடர்பாக அந்த அணி சார்பில் ஒரு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதில், “கிங் கோலி வந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட் ரசிகர்களிடம் வேகமாக வைரலாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் தொடர் முதல் தற்போது வரை ஒரே அணியில் விளையாடிய வீரர் விராட் கோலி மட்டும் தான். இவர் தற்போது வரை 207 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6283 ரன்கள் எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 15 போட்டிகளில் 405 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆகவே இம்முறை வெறும் வீரராக ஐபிஎல் தொடரில் கோலி களமிறங்க உள்ளார். ஆகவே இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டன் டுப்ளிசியின் முதல் நாள் பயிற்சி ஆட்டத்தை யூட்யூபில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், டுப்ளிசி கடைசியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் ’மிஸ் யூ’ கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வீடியோவில், டுப்ளிசி அணி வீரர்களுடன் உரையாடுகிறார். கேப்டனாக வழிநடத்திச் செல்கிறார். மேலும், பேட்டிங் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் டுப்ளிசியை மஞ்சள் நிற ஜெர்ஸியில் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சிவப்பு நிற ஜெர்ஸியில் பார்ப்பது புதிதாக இருந்திருக்கும். சென்னை அணி ரசிகர்கள் கொஞ்சம் சோகமாகவும், புதிய கேப்டனை வரவேற்ற பெங்களூரு ரசிகர்கள் இம்முறை கோப்பையை அடிக்கும் முனைப்பிலும் உற்சாகம் அளித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்