15 வது ஐ.பி.எல் சீசன் கோலாகலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் ஐ.பி.எல் இல் அதிக முறை கோப்பையை வென்ற அணிகள் மட்டுமில்லை. அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட அணிகளும் கூட. ஆனால், அந்த இரண்டு அணிகளுமே இந்த சீசனை மோசமாக தொடங்கியிருக்கின்றன.
சென்னை அணி ஹாட்ரிக் தோல்வியைடைந்திருக்கிறது. மும்பை அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்றிருக்கிறது. இரண்டு அணிகளுமே வெற்றிக்கணக்கை தொடங்காதது ரசிகர்களை பெரிதாக அப்செட் ஆக்கியிருக்கிறது. தோல்விகளை விட அந்த அணிகள் தோற்கும் விதம் ரசிகர்களின் நம்பிக்கையையே குலைத்திருக்கிறது. இந்த முறை சிஎஸ்கே மும்பை இரண்டுமே அவ்வளவுதான். எல்லாமே முடிந்தது என ரசிகர்களே விரக்தியான வார்த்தைகளில் பேசி வருகின்றனர். இந்த மாதிரியான ரசிகர்களுக்கு சொல்வதற்கென்றே ஒரு செய்தி இருக்கிறது. அது, 'Nothing is over Until it's over'. அதாவது, 'எல்லாம் முடியும் வரைக்கும் எதுவுமே முடியவில்லை' என்பதாகும்.
போர்க்களத்தில் ஒரு உண்மையான சுத்த வீரன் கடைசி சொட்டு இரத்தத்தை உடலில் தாங்கியிருக்கும் வரை வாள் வீசி போராடுவான். அந்த போர்க்குணத்தையும் மன உறுதியையும் அவனுக்கு கொடுப்பது 'Nothing is over until it's over' எனும் நம்பிக்கை மட்டுமே.
கடைசி வரை போராட வேண்டும் என்கிற இந்த நம்பிக்கையை விளையாட்டு போட்டிகளில் அதிகம் பார்த்திருப்போம். விளையாட்டுகளின் அடிநாதமே கூட இதுதான். சமீபத்தில் நடந்திருந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டியில் மெத்வதேவை எதிர்த்து ஆடிய நடால் முதல் இரண்டு செட்களையும் இழந்திருப்பார். மெத்வதேவுக்கு போட்டியை வெல்ல இன்னும் ஒரு செட் போதுமானது. ஆனால், நடாலுக்கு போட்டியை வெல்ல எஞ்சியிருக்கும் மூன்று செட்களும் தேவை. இமாலயமான டாஸ்க் இது. ஆனால், நடால் அதை நிகழ்த்திக் காட்டினார். இரண்டு செட்கள் முடிந்தவுடன் எல்லாமே முடிந்ததென நினைத்தவர்களின் கணிப்புகளை உடைத்தெறிந்தார். நடால் அந்த 3 செட்களையும் வென்றதற்கும் வரலாற்று சிறப்புமிக்க 21 வது க்ராண்ட்ஸ்லாமை வென்றதற்கும் 'Nothing is over Until it's over' என்ற நம்பிக்கையை விட வேறென்ன காரணம் இருந்திருக்க முடியும்.
டென்னிஸை விட்டுவிடுவோம். கிரிக்கெட்டிற்கே வருவோம். நேற்று நடந்த பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 வது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியாவை இறுதிப்போட்டியில் எதிர்த்து ஆடிய அணி இங்கிலாந்து.. இங்கிலாந்துதான் நடப்பு சாம்பியன். ஆனால், இங்கிலாந்து இந்த தொடரின் தொடக்கத்தில் சாம்பியன்கள் போல ஆடியிருக்கவில்லை. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றிருந்தார்கள். அப்படியே சென்னை போலத்தான்!
இங்கிலாந்து அவ்வளவுதான். அரையிறுதிக்கு செல்வதே கடினம் என பேச்சுகள் எழுந்தது. ஆனால், இங்கிலாந்து கம்பேக் கொடுத்தது. அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அசாத்தியமான டார்கெட்டை நிர்ணயித்த போதும் கடைசி சொட்டு இரத்தம் எஞ்சியிருக்கும் சுத்த வீரனை போல நட் சீவர் போராடியிருந்தார். இங்கிலாந்து தோற்றுதான் போனது. ஆனால், அவர்கள் Nothing is over Until it's over என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர். தளராமல் கடைசி வரை போராடியிருந்தனர்.
பொத்தாம் பொதுவாக கிரிக்கெட் என்று கூட வேண்டாம். ஐ.பி.எல் ஐ மட்டுமே எடுத்துக் கொள்வோமே. கடந்த சீசனில் முதல் பாதியில் 5 போட்டிகளில் தோற்றிருந்த கொல்கத்தா இரண்டாம் பாதியில் வீறுகொண்டு எழுந்து இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்ததே? 2019 சீசனில் வெறும் 6 போட்டிகளை வென்ற போதிலும் சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப்ஸ் வரை வந்திருந்ததே? ஏன் மும்பைக்காக 2014 சீசனில் கோரி ஆண்டர்சன் அடித்த அடி ஞாபகமில்லையா? வாய்ப்பை இல்லை என்ற சூழலிலிருந்து மும்பையை ப்ளே ஆஃப்ஸிற்கு நகர்த்தியது அந்த எதுவுமே முடிந்துவிடவில்லை நம்பிக்கையின்றி வேறென்ன? சிஎஸ்கே முதல் முறையாக சாம்பியனான 2010 சீசனில் அத்தனை போட்டிகளையும் வென்றா கோப்பையை வென்றிருந்தது. லீக் போட்டியில் சிஎஸ்கே வென்றிருந்தது வெறும் 7 போட்டிகள்தான். தரம்சாலாவில் பஞ்சாபிற்கு எதிராக 108 மீட்டருக்கு சிக்சர் அடித்து சென்னையை செமி ஃபைனலுக்கு அழைத்து சென்றிருப்பாரே? அந்த வெறியாட்டத்தில் தோனியின் கண்களில் தெரிந்தது Nothing is over Until it's over என்கிற பெரும் நம்பிக்கைதானே?
விளையாட்டுலகில் வீழ்ச்சிகள் தவிர்க்கமுடியாதவை. ஆனால், வீழும் அணிகளும் வீரர்களும் எப்போதும் வீழ்ந்தே கிடப்பார்கள் என நினைப்பது அபத்தம். சென்னையும் மும்பையும் இப்போது வீழ்ந்திருக்கிறார்கள். அதற்காக வீழ்ந்தேதான் இருப்பார்கள் என முடிவுரை எழுதுவது ஏமாற்றத்தையே தரும். சிஎஸ்கேவும் சரி மும்பையும் சரி எப்போதுமே சாம்பலிலிருந்து மீண்டு ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்கள். Because they know that 'Nothing is over. Until it's over' வெயிட் பண்ணுங்க பாய்ஸ்! இனிதான் ஆட்டமே இருக்குது!!