ஐ.பி.எல். தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றும் ப்ளே ஆப் வாய்ப்பு சுற்றை நிர்ணயிக்கும் என்பதால் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறவே முயற்சிக்கும். புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 46வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேருக்கு நேர் மோத இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஆரம்பம் முதல் தடுமாற்றம்தான். இதுவரை நடந்த 8 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்தது. இதனால் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் கனவு மங்கியது என்றே சொல்லலாம். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப்களுக்குச் செல்ல இனி வரும் போட்டியில் ஒன்றில் கூட தோற்காமல் இருக்க வேண்டும். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெறுவதன் மூலம் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நேற்று திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். வழக்கம்போல், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து மீண்டும் சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று நம்புகின்றனர்.
அதேபோல், ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியும், 3 தோல்வியும் அடைந்துள்ளது. இனிவரும் 6 போட்டிகளில் ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். எனவே சென்னை அணியுடனான போட்டியில் ஹைதராபாத் அணி நிச்சயம் வெல்லும் முனைப்பிலேயே களமிறங்கும்.
சென்னை அணியை பொறுத்தவரை இந்தாண்டு ருதுராஜ் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் 50 ரன்களுக்கு மேல் குவித்தார். மற்றபடி சொல்லி கொள்ளும் அளவிற்கு அவரது ஆட்டம் இல்லை. அதேபோல், உத்தப்பா தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். தற்போது அவரும் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வருகிறார்.
இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, மீண்டும் சென்னை அணிக்காக வீரராக களமிறங்கி இருப்பது சென்னை அணிக்கு பலம் தான். அவர் இந்த போட்டியில் இருந்து புது புத்துணர்ச்சியுடன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்