15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று புனேவில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்தாலும், நடப்பு தொடரின் நிலவரப்படி குஜராத் அணி பலம் மிகுந்த அணியாக வலம் வருகிறது.
நடப்பு தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை அணி கடந்த போட்டியில் பெங்களூர் அணியுடன் வெற்றி பெற்றதால் உத்வேகம் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று 5 போட்டியில் 4 வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் அணி பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் சமபலத்தில் உள்ளது. பேட்டிங்கில் அந்த அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் அசத்தி வருகிறார். அவரது அசத்தலான பேட்டிங் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் ஒத்துழைப்பு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் இளம் வீரர் சாய் சுதர்சன், விஜய்சங்கர், டேவிட் மில்லர் நம்பிக்கை அளிக்க உள்ளனர். கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்ட கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும், இளம்வீரர் அபினவ் மனோகரும் உள்ளனர். இக்கட்டான நேரத்தில் மிகவும் நேர்த்தியாக பேட் செய்ய ராகுல் திவேதியாக உள்ளார்.
பந்துவீச்சில் முகமது ஷமி, நல்கண்டே, பெர்குசன் ஆகியோருடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். சுழற்பந்துவீச்சில் ரஷீத்கான் விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சென்னை அணி கடந்த 4 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் கடந்த போட்டியில் 215 ரன்கள் குவித்து தனது பேட்டிங் பலத்தை நிரூபித்துள்ளது. சென்னை அணியின் உத்தப்பாவும், ஷிவம் துபேவும் கடந்த போட்டியில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இந்த போட்டியிலும் அவர்களது அசத்தலான பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வீரராக தனது பார்முக்கு திரும்பினால் சென்னை நல்ல ஸ்கோரை குவிக்கும். மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ப்ராவோ, தோனி ஆகியோரும் பேட்டிங்கில் அசத்தினால் சென்னை அணி மீண்டும் ஒரு இமாலய இலக்கை குவிக்க வாய்ப்புள்ளது.
சென்னை அணியை பொறுத்தவரை பந்துவீச்சு மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. தீபக்சாஹர் முழுவதும் தொடரில் இருந்து விலகிய நிலையில், ப்ரெடரியஸ், முகேஷ் சவுத்ரி, ஜோர்டன் ஆகியாரே வீசி வருகின்றனர். கேப்டன் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தனது திறமையை காட்டுவது சென்னை அணிக்கு அவசியம் ஆகும். சென்னை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம் ஆகும். சென்னையில் இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இன்று ஆடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயத்தில் புதிய அணியான குஜராத் தனது வெற்றிப்பயணத்தை தொடர தீவிர முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கலாம். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத்தும், புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள சென்னையும் மோதும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்