தற்போதைய 2022ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் போதாத காலமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கூடுதலாக ஏற்பட்டுள்ள பின்னடைவைச் சமாளிக்க புதிய கிரிக்கெட் வீரர் ஒருவரைக் களமிறக்கியுள்ளது சென்னை அணி.
ஏற்கனவே முதுகில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தீபக் சஹார் இந்தப் போட்டித் தொடரில் விலக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பௌலரான ஆடம் மில்னேவுக்குச் சமீபத்தில் ஏற்பட்டுள்ள தொடை தசை காயம் காரணமாக அவரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆடம் மில்னேவுக்குக் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய ஐபிஎல் தொடரில் ஆடம் மில்னேவுக்கு மாற்றாக, இலங்கையைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானாவைக் களமிறக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இலங்கை நாட்டைச் சேர்ந்த இளம் பௌலரான மதீஷா பதிரானா இலங்கை அணி சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிகளில் இரண்டு முறை பங்கேற்றுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் 6 விக்கெட் எடுத்துள்ளார் மதீஷா பதிரானா. எனினும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் அனைவரையும் தன்னுடைய அதிவேக பௌலிங் மூலம் திரும்பிப் பார்க்க செய்துள்ளார் மதீஷா பதிரானா.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மதீஷா பதிரானா மணிக்கு சுமார் 175 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியதாக வேகக் கணிப்பு இயந்திரம் காட்டியதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே, அனைத்து வயதினருடன் ஒப்பிடுகையிலும் மிக வேகமான பந்து வீச்சாகக் கருதப்பட்டது. எனினும், சில நிமிடங்களில், அவர் வீசிய வேகம் மணிக்கு 175 கிலோமீட்டர் அல்ல எனவும், அது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வீரரான லசித் மலிங்காவின் ஸ்டைலைப் பின்பற்றி பந்து வீசுபவர் மதீஷா பதிரானா. மேலும், யார்க்கர் பந்து வீச்சில் சிறந்தவரான மதீஷா மீது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட காலமாக கண் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் போது மதீஷா பதிரா சென்னை அணியின் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.