சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்னும் புள்ளிப்பட்டியலில் முன்னேறவில்லை. இந்நிலையில், மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இறுதிப்போட்டியைப் போல பார்க்கப்படும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில், சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
அதில், துல்லியமாக பந்துவீசும் அர்ஜூன், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த இஷான் கிஷனை க்ளீன் பவுல்ட் செய்கிறார். ”இது பர்ஃபெக்ட் யார்க்கர்” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அர்ஜூன் டெண்டுல்கர், இன்னும் மும்பை அணிக்காக ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. விரைவில் அவர் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வீடியோவைக் காண:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ல் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 10 முறை முதலில் பேட் செய்தும், சென்னை அணி 7 முறையும் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 9 முறை இரண்டாவது பேட் செய்தும், சென்னை அணி 6 முறை இரண்டாவது பேட் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஆடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மும்பை அணி 6 போட்டிகளில் ஆடி 6 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் ஆடிய போட்டிகளில் தோல்வியையே பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்