ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் முடிசூடா மன்னனாக வலம் வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர்களில் இதுவரை 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியனாக வாகை சூடியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக எம்.எஸ்.தோனி வலம் வருகிறார். அவருடன் நட்சத்திர வீரர்களாக சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ப்ராவோ, கெய்க்வாட், பாப் டுப்ளிசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்காக மீண்டும் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தின்படி, ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். இதனால், அனைத்து அணிகளும் தங்களது நட்சத்திர வீரர்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
புதிய விதியின்படி, 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர்கள் ஆகியோரை மட்டுமே தக்க வைக்க முடியும். நடப்பு சாம்பியனான சென்னை அணியில் அனைவரும் நட்சத்திர வீரர்களாக வலம் வருகின்றனர். சென்னை அணியில் எம்.எஸ்.தோனியை தக்க வைப்போம் என்று ஏற்கனவே அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
சென்னை அணியில் தக்க வைக்கப்படும் பிற வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை அணியில் தோனிக்கு அடுத்தபடியாக அதிகளவில் ரசிகர்களை கொண்ட சுரேஷ் ரெய்னா நடப்பு தொடரின் கடைசி கட்டத்தில் களமிறக்கப்படவில்லை. ஆனால், இந்த தொடர் முழுவதும் ஜடேஜா பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அசத்தினர். அதேபோல, தொடக்க வீரர் ருதுராஜ் சென்னை அணியின் அசத்தலான வீரராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், சென்னை அணி நிர்வாகம் அடுத்த ஐ.பி.எல், தொடரில் தோனியுடன் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்டை தக்க வைக்கும் மும்முரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் வெளிநாட்டு வீரர்களில் ப்ராவோவைவிட பாப் டுப்ளிசிசுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களாக திகழ்ந்து வந்த ரெய்னாவும், ப்ராவோவும் அடுத்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றிவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்ன தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாலே புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி நடப்பு தொடரில் அசத்திய ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோரின் நிலையும் ஏலத்திற்கு பிறகே தெரிய வரும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்