ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் இந்த மெகா ஏலம் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக தங்களுடைய மூன்று வீரர்களையும் தேர்வு செய்து கடந்த வாரம் அறிவித்தனர்.
இந்தநிலையில், ஐ.பி.எல் 2022ம் ஆண்டுக்கான போட்டிகளில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அடங்கிய முழுப் பட்டியலை பி.சி.சி.ஐ நேற்று வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 30 கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. அதாவது சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் (அடிப் படை விலை ரூ.2 கோடி), வாஷிங்டன் சுந்தர் (ரூ.1/2 கோடி), விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (ரூ.2 கோடி), வேகப் பந்து வீச்சாளர் டி.நடராஜன் (ரூ.1 கோடி), முரளிவிஜய் (ரூ.50 லட்சம்), விஜய் சங்கர் (ரூ.50 லட்சம்), சந்தீப் வாரியர் (ரூ.50 லட்சம்), ஷாருக்கான் (ரூ.40 லட்சம்), அருண் கார்த்திக் (ரூ.40 லட்சம்) ஆகியோர் குறிப்பிட்ட தொகைக்கு இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து, என். ஜெகதீசன், முருகன் அஸ்வின், ஹரி நிஷாந்த், சாய் கிஷோர், எம்.சித்தார்த், சஞ்சய் யாதவ், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், ஜி.பெரியசாமி, ஆர்.சிலம்பரசன், அலெக்சாண்டர், கிஷன் குமார், சோனு யாதவ், வி.அதியசயராஜ், வி.கவுதம், எம். முகமது, பிரதோஷ் பால், ஜெ.கவுசிக், நிதிஷ் ராஜகோபால், ஆர்.விவேக் (அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயம்) உள்ளிட்டோர் ஏலத்திற்கு வந்துள்ளனர்.
அதேபோல், கடந்த சையது முஸ்தாக் அலிகோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிசுற்றில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, ஷாருக்கான் சிக்சர் விளாசி தமிழக அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். தொடர்ந்து, அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் ஷாருக்கான் விரைவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 தமிழக வீரர்களில் யார் யார் எந்த எந்த அணிகளில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்றும், ஒரு சிலர் எந்த அணியிலும் ஒப்பந்தம் செய்யபடாமல் வெளியேறுகிறார்கள் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்