2021 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்கள் தொடங்கிய சில நாட்களில் இந்த சீசனோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஏற்கனவே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்ததன் பின்னணியில் பிசிசிஐ அழுத்தம் மற்றும் உள் அணி பிரச்சனைகள் இருக்குமோ என்ற பேச்சுக்கள் அடிப்பட்டன.

இந்நிலையில், கோலி ஆர்சிபியின் கேப்டனாக இருக்கப்போகும் கடைசி சீசன் என்பதால், இம்முறை நிச்சயம் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. “ஈ சாலா கப் நமதே” என்ற ஆர்சிபியின் மந்திரம், உலக பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்து ஏமாற்றம் அடைவது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டும் அதே சம்பவம் நடந்தது. 

கோப்பை இல்லை என்றாலும், கோலியின் கேப்டன்சியில் சொல்லிக் கொள்ளும்படியான ரெக்கார்டுகளை பதிவு செய்துள்ளது ஆர்சிபி. கோலியின் கேப்டன் பயணத்தில் இருந்து சில ஹைலைட்ஸ் இதோ:

1. நம்பர்கள் சொல்வது என்ன?

கோலி தலைமையில், பெங்களூரு அணி 140 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 66 போட்டிகளில் வெற்றியும், 70 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. வெற்றி வாய்ப்பு: 48.52%

2.  கோலி தலைமையில் 9 சீசன்களில் விளையாடியுள்ள ஆர்சிபி, 3 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. முதல் முறை ப்ளே ஆஃப் சென்ற 2016 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது. 2020, 2021 என இந்த இரண்டு சீசன்களிலும் அடுத்தடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.

3. கேப்டன் கோலி தலைமையில், ஐபிஎல்லில் ஆர்சிபி

2013 ஐந்தாவது இடம்
2014 ஏழாவது இடம்
2015 மூன்றாவது இடம்
2016 இரண்டாம் இடம்
2017 எட்டாவது இடம்
2018 ஆறாவது இடம்
2019 எட்டாவது இடம்
2020 நான்காவது இடம்
2021 நான்காவது இடம்

4. ஐபிஎல் வரலாற்றில், கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோலிக்கு முதலிடம். 140 போட்டிகளில் 4481 ரன்கள் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தோனி (203 போட்டிகளில் 4456 ரன்கள்), மூன்றாம் இடத்தில் கம்பீர் (129 போட்டிகளில் 3518 ரன்கள்) உள்ளனர்.

நம்பர்கள் சாதகமாக இருந்தாலும் கோப்பை இல்லை என்பது ஆர்சிபியின் ஒரே பெரும் கவலை. ஆனால், ஆர்சிபியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகி இருப்பதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில்தான் வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் கோலி தனது கேப்டன்சி குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நான் 2 காரணங்களுக்காக கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். அதில் முக்கியமான காரணம் எனக்கு இருக்கும் பணிச் சுமை. இரண்டாவது என் மீது உள்ள பொறுப்புகள் மற்றும் கடமைகள் மீது நான் நேர்மை அற்றவனாக இருக்க விரும்பவில்லை. என் மீதான பொறுப்புகளை 120 சதவீதம் சரியாக செய்ய வேண்டும் என நான் விரும்புவேன். அவ்வாறு செய்யாவிட்டால் அதிலிருந்து விலக முடிவு செய்துவிடுவேன். நான் எனக்கு வழங்கப்பட்டு உள்ள பொறுப்புகளை பெயருக்காக சுமந்து கொண்டிருக்கும் நபர் இல்லை. நான் எதன் மீதும் அதிக நாட்டம் இல்லாத ஒருவன்.” எனத் தெரிவித்து இருக்கிறார்.