துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபயர்-1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து சென்னையை வெற்றி பெறவைத்தார்.


சென்னை அணியின் வெற்றிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று இரவு முதல் இப்போது வரை தோனியும், தோனியின் ஃபினிஷிங் போட்டிகளும்தான் வைரல். இந்நிலையில், தோனியின் இந்த வெற்றியை பாராட்டி தோனியின் இந்திய அணியின் கேப்டனும், ஐபிஎல் ப்ளே ஆப்பில் விளையாடியுள்ள உள்ள ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனுமாகிய விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், " கிங் இஸ் பேக்... எப்போதும் மிகச்சிறந்த ஃபினிஷரின் ஆட்டம். என்னை சீட்டின் நுனியில் இருந்து இன்று இரவு மீண்டும் ஒருமுறை துள்ளிக்குதிக்க வைத்து விட்டீர்கள்" என்று பதிவிட்டிருந்தார். 






இந்த ட்வீட் பல லட்சம் லைக்குகளை தாண்டி, பல்லாயிரம் ரீ-ட்வீட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வரும் இந்த ட்வீட்டை பதிவிடுவதற்குப் முன்பு, கோலி ஒரு வார்த்தையை தவறவிட்டு பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பதிவை நீக்கிவிட்டு மீண்டும் புதிதாக ட்வீட் செய்த கோலி நெட்டிசன்களின் கண்களில் சிக்கி கொண்டார். 






முதலாவதாக ட்வீட் செய்தபோது, “இந்த விளையாட்டின் சிறந்த ஃபினிஷர்” என பதிவிட்டிருந்தார். இதை திருத்திக் கொண்டு பதிவிட்ட பதிவில், “இந்த விளையாட்டின் ஆகச்சிறந்த ஃபினிஷர் இவரே” என்று கோலி பதிவிட்டதற்கு தோனி, கோலி ரசிகர்கள் மட்டுமின்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் ’ஹார்ட்டின்களை’ அள்ளியுள்ளது. தோனியின் ஃபினிஷிங் பவுண்டரி, ரசிகர்களின் ஆரவராத்தை தட்டி எழுப்பியுள்ளது. விராட் முதல் தனுஷ் வரை, சென்னை முதல் துபாய் வரை தோனி ரசிகர்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.