”தோனி ஃபினிஷஸ் ஆஃப் இன் ஸ்டைல்” - இந்த வர்ணனை ஒவ்வொரு சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி ரசிகரின் மனதிலும் ஆழமாய் பதிந்திருக்கும். ஒவ்வொரு முறையும் சிஎஸ்கேவின் இக்கட்டான சூழலில் தோனி களமிறங்கும்போதும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையை தோனி பெற்றிருப்பார். ஒவ்வொரு முறை தோனி போட்டியை முடித்து வைக்கும்போது, முதல் முறை சிஎஸ்கே வெற்றி அடைந்ததைப் போலவே கொண்டாட்ட மனநிலையை கடத்திச் செல்வார் தோனி.


இது போன்ற ஒரு சம்பவம்தான் துபாயில் நேற்று நடைபெற்றது. கம் - பேக் தருவது சிஎஸ்கேவுக்கு புதிதல்ல. “இதுதான் கம்-பேக்” என சொல்லி கொள்ளும் அளவிற்கு ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே திருப்பி அடிக்கும், போட்டிகளை வெல்லும், கோப்பையை கைப்பற்றும். அப்படி, 2020  சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல், இந்த சீசனில் முதல் அணியாய் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, “சிஎஸ்கே எப்போதும் சிஎஸ்கேதான்” என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது தோனி தலைமையிலான யெல்லோ அணி. 






விராட்  கோலி முதல் தனுஷ் வரை, ஒவ்வொரு தோனி ரசிகரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ளார் தோனி. அதன் வெளிபாடாகவே, நேற்றைய போட்டியின் முடிவுக்கு பிறகு தோனியை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். போட்டிகளை வெற்றியோடு ஃபினிஷ் செய்வது தோனிக்கு புதிதல்ல. ஆனால், ”தோனியால் இனி விளையாட முடியாது”, ”பழைய தோனி இனி திரும்ப வரமாட்டார்”, “எல்லாம் முடிந்தது, இதுதான் தோனிக்கு கடைசி சீசன்” என முற்றுப்புள்ளி வைத்த வாசகங்களுக்கு கமா போட்டிருக்கிறார் தோனி. 


இந்த நேரத்தில், தோனியின் பழைய ஃபினிஷிங் மேட்சுகள் பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட்:


2010 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் 


சிஎஸ்கே ரசிகர்கள் மறக்க முடியாத விண்டேஜ் போட்டிகளில் இதுவும் ஒன்று. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 193 ரன்களை சேஸ் செய்த சென்னை அணிக்கு கடைசி ஓவரை எதிர்கொள்ள ஆல்பி மார்கல்லோடு களத்தில் இருக்கிறார் தோனி. பந்துவீசியது இர்ஃபான் பதான். 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4-2-6-6 என அதிரடி காட்டி போட்டியை முடித்து வைத்தார் தோனி. இந்த ஓவரையும், இந்த ஃபினிஷிங்கையும் கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக பதிவானது. 


2018 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 


2018, சிஎஸ்கேவின் கம்-பேக் சீசன். அதிக எதிர்ப்பார்ப்புகளை கிளப்பிய இந்த போட்டியில், 208 ரன்களை சேஸ் செய்தது சென்னை அணி. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், கோரி ஆண்டர்சன் பந்துவீசினார். முதல் இரண்டு பந்துகளில் பிராவோ 10 ரன்கள் சேர்க்க, மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள். மூன்று பந்துகள் மீதமிருக்கையில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருக்கிறார். ஓவரின் நான்காவது பந்தில் தோனி சிக்சர் அடிக்க, சிக்சரோடு போட்டி முடிந்தது. இந்த போட்டியில், 34 பந்துகளில் 70 ரன்கள் தோனியே ஆட்ட நாயகன்!






2014 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் 


இந்த போட்டியில்  வெற்றி பெற 157 ரன்களை சேஸ் செய்த சென்னை அணிக்கு, கடைசி ஓவரின் 3,4வது பந்துகளில் சிகசர், பவுண்டரியை அடித்து 3 பந்துகளில் மீதமிருக்கையில் வெற்றியை உறுதி செய்தார் தோனி. இந்த போட்டியில் 12 பந்துகளில்ம் 22 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் போட்டியை முடித்து கொண்டார் தோனி.


2013 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபத்


160 ரன்களை சேஸ் செய்த சென்னை அணிக்கு, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனியும், மோரிஸும் இருந்தனர். அந்த போட்டியின் கடைசி ஓவரில் முதல் பந்து வைடாக, அடுத்து டாட் பால். மூன்றாவது பந்தில் 6, அடுத்த இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார் தோனி. 37 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்த தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.