நடப்பு ஐபிஎல் சீசனின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தேர்ச்சி பெற்றுவிட்டன. இந்நிலையில், ப்ளே ஆஃப் செல்ல மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் என நான்கு அணிகளும் போட்டியில் உள்ளன.


நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் சொதப்பலாக அமைந்துள்ளது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய மும்பை இந்தியன்ஸ், கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆல்-ரவுண்டிங் பர்ஃபாமென்ஸ் தந்து கம் - பேக் கொடுத்தது. எனினும், இனி வரும் போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் என்பதால், டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை டஃப் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்கும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும், 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதுகின்றன.






வரலாறு சொல்வது என்ன?


ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 16 முறையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 13 முறையும் வென்றுள்ளன.  நடப்பு சீசனில், இதற்கு முன்பு இரு அணிகளும் மோதிய போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், மும்பை - டெல்லி அணிகள் ஒரு முறை மோதியுள்ளன. இதில், டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.


2020 ஐபிஎல் சீசனின்போது, இரு அணிகளும் நான்கு முறை நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அதில் முக்கியமாக, இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 


முதலில் பேட்டிங் செய்து 11 முறை மும்பை அணியும், 5 முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் செய்து 8 முறை டெல்லி அணியும், 5 முறை மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது.