நடப்பு ஐபிஎல் சீசனின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தேர்ச்சி பெற்றுவிட்டன. தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வந்த ஹைதராபாத் அணி, ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில், ப்ளே ஆஃப் செல்ல மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்கு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் என நான்கு அணிகளும் போட்டியில் உள்ளன.


இந்த சீசனின் இரண்டாம் பாதி போட்டியில் முக்கியமான ஒரு கட்டத்தில்தான் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பங்காற்றியுள்ள அந்த அணியைச் சேர்ந்த தமிழக வீரர் ஷாரூக்கான். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரில் வின்னிங் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டிக்குப் பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ராகுல், “பேட்டிங் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றிக் கொண்டார் ஷாரூக்கான். தமிழ்நாடு அணிக்காக நிறைய வின்னிங் மேட்சுகள் ஆடியிருக்கிறார். பஞ்சாப் அணிக்காகவும் அதையே செய்வார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது” என சொல்லி முடித்தார். 






2021 ஐபிஎல் சீசன் மூலம், ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருக்கும் ஷாரூக்கான் சென்னையைச் சேர்ந்தவர். வலது கை பேட்ஸ்மேனான அவர், நம்பிக்கைக்குரிய ஃபினிஷராக மாநில அணிக்கு பல மேட்சுகளை விளையாடி இருக்கிறார். டிஎன்பிஎல் தொடரிலும் கவனிக்கத்தக்க ஆட்டங்களை விளையாடி இருக்கும் ஷாரூக்கானை, 2020 ஆக்‌ஷனின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.


ஷாரூக்கான் - பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை நினைவுப்படுத்தும் பெயர் என்பதால் அடிக்கடி பாலிவுட்-கிரிக்கெட் செய்திகளில் தமிழ்நாடு ஷாரூக்கான் இடம் பிடித்து வந்தார். அப்படி ஒரு நிகழ்வாகதான் அமைந்திருந்தது அந்த ஏலம் எடுக்கும் நிகழ்வும். 20 லட்சத்தில் தொடங்கி 5.25 கோடி ரூபாய்க்கு ஷாரூக்கானை பஞ்சாப் அணி வாங்கியது. ஷாரூக்கான் ஏலம் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ஏலம் முடிந்தவுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, “ஷாரூக்கான் எங்களுக்குத்தான்” கூச்சலிட்டது 2020 ஐபிஎல் ஏலத்தின் ஹைலைட். 


தனது கரியரில் சிறப்பாக விளையாடி வந்தும், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற U-19 ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷாரூக்கான் தேர்வு செய்யப்படாதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதனை தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர், கோவா அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றியுடன் ஃபினிஷ் செய்தார்.






2018-ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் கோவை அணிக்காக விளையாடி சிறப்பான பர்ஃபாமென்ஸை பதிவு செய்த அவர், 2021-ம் சீசனில் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் நான்காவது இடத்தில் நிறைவு செய்தது கோவை அணி. இப்போது ஐபிஎல் தொடரில் விளையாட ஆரம்பித்திருக்கும் ஷாரூக்கான், பல ஃபினிஷிங் மேட்சுகளை வெற்றியுடன் முடிக்க காத்திருக்கின்றார்.