கொரோனா தொடரின் காரணமாக நடப்பாண்டில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் துபாயில் இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், முதல் பாதியில் ஆடிய பல்வேறு வீரர்களும் இரண்டாம் பாதியில் பல்வேறு காரணங்களால் ஆட முடியவில்லை என்று விலகியுள்ளனர். இதனால், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சில அணிகள் எடுத்துள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:


டெல்லி, பஞ்சாப் : 


டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பென் துவார்ஷூஸ் அறிமுக வீரராக டெல்லி அணியில் இணைந்துள்ளார். அதேபோல, டெல்லி அணியில் மற்றொரு பந்துவீச்சாளரான சித்தார்த்திற்கு பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்துவீச்சாளர் மொஷின்கானுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரூஷ்கலாரியா சேர்க்கப்பட்டுள்ளார்.




பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிலே மெரிடித்திற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் ஜேக் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் அடில்ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.  பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்தின் டேவிட் மலானுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் மார்க்ரம் சேர்க்கப்பட்டுள்ளார்.


ராஜஸ்தான் ராயல்ஸ் : 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் சாம்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.




 ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் ஸ்டோக்சிற்கு பதிலாக மேற்கிந்தீய தீவுகள் அணியின் ஓசானே தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜோஸ் பட்லருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் எவின்லீவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.


பெங்களூர், ஹைதராபாத் : 


பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பாவிற்கு பதிலாக இலங்கையின் வளர்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா இடம்பெற்றுள்ளார். பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்சிற்கு பதிலாக இலங்கையில் துஷ்மந்தா சமீரா சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சனுக்கு பதிலாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.




பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனுக்கு பதிலாக, சிங்கப்பூரைச் சேர்ந்த பேட்ஸ்மேன் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக பந்துவீச்சாளர் ஆகாஷ்தீப் சேர்க்கப்பட்டுள்ளார். ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஜானி பார்ஸ்டோவிற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரர் ரூதர்போர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.


இவர்களில் பென் துவார்ஷூஸ், நாதன் எல்லீஸ், மார்க்ரம், கிளென் பிலிப்ஸ், ஹசரங்கா, டிம் டேவிட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றுவீரர்களின் வருகை எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.