நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடந்த ஐபிஎல் சீசனில், முதல் அணியாக வெளியேறிய சென்னை இம்முறை வலுவான கம் - பேக் கொடுத்துள்ளது. இனி சென்னை அணிக்கு ஒரே கவலை, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து குவாலிஃபையர் போட்டியில் விளையாடி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்பது மட்டும்தான்.


சென்னை அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்கும் மும்பை - டெல்லி அணிகளும், 7.30 மணிக்கு அபு தாபியில் நடக்கும் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.


கடந்த ஐபிஎல் சீசனில், 7வது இடத்தில் சென்னையும், 8வது இடத்தில் ராஜஸ்தானும் நிறைவு செய்தன. இந்த ஆண்டு, கம்-பேக் தந்திருக்கும் சென்னை அணி, நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஃபார்மில் இருக்கின்றது. ராஜஸ்தானைப் பொருத்தவரை, அப்போதும் இப்போதுமாய் வெற்றி தோல்விகள் என மாறி மாறி அடி வாங்குவதால், ப்ளே ஆஃப் வாய்ப்பு ரிஸ்க்கான நிலையில் உள்ளது.


இனி வரும் போட்டிகளில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமின்றி, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளின் வெற்றி தோல்விகளையும் பொறுத்தே ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்., அதுமட்டுமின்றி ரன் ரேட்டை சாதகமாக வைத்திருக்க, இன்றைய போட்டியில் பெரிய வெற்றியை ஈட்டும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும். 






ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் - நேருக்கு நேர்:


இதுவரை 25 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில், சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் அபுதாபி ஷேக் சையத் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதில், சென்னை அணியே வெற்றியை ஈட்டியது.


முதலில் பேட்டிங் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் ரெக்கார்டில், சென்னை அணி 7 முறையும், ராஜஸ்தான் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.