2021 ஐபிஎல் தொடரின் 53-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அபு தாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 141 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. 


அடுத்து சேஸிங் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, விராட் - படிக்கல் ஓப்பனிங் தந்தனர். ஆனால், முதல் ஓவரிலேயே புவனேஷ்குமார் பந்தில் எல்பிடபிள்யூ ஆன விராட், ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஒன் டவுன் களமிறங்கிய கிறிஸ்டியனும் வந்த வேகத்தில் அவுட்டாக, 18/2 என பெங்களூரு திணறியது. 


படிக்கல் மட்டும் நிதானமாக விளையாடி ரன் சேர்க்க, ஸ்ரீகர் பரத் 18 ரன்கள் அடித்து வெளியேறினார். இந்த ஐபிஎல் தொடரில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசி அசத்தி வரும் காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக்கின் வேகத்துக்கு வெளியேறினார் பரத். 






நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - படிக்கல் இணை, 54 ரன்களுக்கு களத்தில் நின்றது. இதனால், இலக்கை நெருங்கியது பெங்களூரு. ஆனால்,இரு வீரர்களுமே 40+ ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானதால், அரை சதத்தை மிஸ் செய்தனர். இதனால், கடைசி ஓவர்களுக்கு ஏபிடி வில்லியர்ஸ், சபாஸ் அகமது ஆகியோர் களத்தில் இருந்தனர். போட்டியின் 18வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி இலக்கை சேஸ் செய்த ஷபாஸ் அகமது, அடுத்த ஓவரிலேயே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால், ஃபினிஷிங் பொறுப்பு ஏபிடி வசமானது.


3 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த ஏபிடி, முதல் பந்தில் சிக்சர் அடித்தார். அடுத்து பந்து டாட் பந்தாக, கடைசி பந்தில் வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைரும் ஏபிடியின் சிக்சராக காத்திருந்தனர், பெங்களூரு போட்டியை வென்றது என உறுதியாய் இருந்தனர். ஆனால், ஏபிடியால் சிக்சர் அடிக்க முடியவில்லை, பவுண்டரிகூட போகவில்லை. 1 ரன் மட்டுமே எடுத்தது பெங்களூரு. இதனால், 4 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் த்ரில் வெற்றி பெற்றது.


முதல் இன்னிங்ஸ் ரீகேப்:


ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா ஓப்பனிங் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸ் என தொடங்கிய அபிஷேக் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே கேப்டன் கேன் களத்திற்கு வர வேண்டிய சூழல். ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜேசன் ராயுடன் ஜோடி சேர்ந்த கேன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.


31 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்ஷல் பட்டேலின் ஓவரில் க்ளீன் பவுல்டானார் கேன். இதனால், ப்ரியம் கார்க் அடுத்து பேட்டிங் களமிறங்கினார். கேன் - ஜேசன் ராயின் பார்ட்னர்ஷிப் உதவியதால்,13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஹைதராபாத் அணி. ஆனால், போட்டியின் 15, 16, 18வது ஓவர்களில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத் அணி. இதனால், அதிக ரன் இலக்கை எட்ட இருந்த ஹைதரபாத்தை 150 ரன்களுக்குள் சுருட்டியது பெங்களூரு. 


பெங்களூரு பெளலர்களைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் (3), கிறிஸ்டியன் (2), ஜார்ஜ் கார்டன் (1) சாஹல் (1) என இந்த இன்னிங்ஸில் மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்தனர். 20 ஒவர் முடிவில், 141 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.