2021 ஐபிஎல் தொடரின் 53-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அபு தாபியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 141 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.


ஜேசன் ராய், அபிஷேக் ஷர்மா ஓப்பனிங் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸ் என தொடங்கிய அபிஷேக் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே கேப்டன் கேன் களத்திற்கு வர வேண்டிய சூழல். ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜேசன் ராயுடன் ஜோடி சேர்ந்த கேன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 






31 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்ஷல் பட்டேலின் ஓவரில் க்ளீன் பவுல்டானார் கேன். இதனால், ப்ரியம் கார்க் அடுத்து பேட்டிங் களமிறங்கினார். கேன் - ஜேசன் ராயின் பார்ட்னர்ஷிப் உதவியதால்,13.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஹைதராபாத் அணி. ஆனால், போட்டியின் 15, 16, 18வது ஓவர்களில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத் அணி. இதனால், அதிக ரன் இலக்கை எட்ட இருந்த ஹைதரபாத்தை 150 ரன்களுக்குள் சுருட்டியது பெங்களூரு. 


பெங்களூரு பெளலர்களைப் பொருத்தவரை, ஹர்ஷல் பட்டேல் (3), கிறிஸ்டியன் (2), ஜார்ஜ் கார்டன் (1) சாஹல் (1) என இந்த இன்னிங்ஸில் மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்தனர். 20 ஒவர் முடிவில், 141 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.


இதுவரை இரு அணிகளும்:


இதுவரை, ஐபிஎல் வரலாற்றில் 19 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் 10 முறையும், பெங்களூரு 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷேக் சையத் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது.


நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்து ஹைதராபாத் அணி 7 முறையும், பெங்களூரு அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் ரெக்கார்டைப் பொருத்துவரை, இரு அணிகளும் தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளன. 


பெங்களூரு - ஹைதராபாத் மோதிக் கொண்ட போட்டிகளின் ரெக்கார்டைப் பார்த்தால், ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்துகிறது. எனினும், இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் மோசமான ஃபார்ம் முதல் பாதியை அடுத்து இரண்டாம் பாதியிலும் தொடர்வதால், இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றது.