ஐ.பி.எல். தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 170 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற நெருக்கடியான சூழலில் மும்பை களமிறங்கியது. வில்லியம்சன் காயம் காரணமாக ஆடாததாதல் ஹைதராபாத் கேப்டனாக மணீஷ் பாண்டே பொறுப்பேற்றார்.


தொடக்க வீரர் இஷான் கிஷான் முதல் ஓவரிலே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார். இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்தார். 4வது ஓவரில் ரோகித் சர்மா அளித்த கடினமான கேட்ச் வாய்ப்பை ரஷீத்கான் கோட்டைவிட்டார். 4 ஓவர்களில் மும்பை அணி 63 ரன்களை கடந்தது. இஷான்கிஷான் மட்டும் 16 பந்தில் 50 ரன்களை அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த மும்பை வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த நிலையில், 18 ரன்கள் எடுத்திருந்த ரோகித்சர்மாவை ரஷீத்கான் பிரித்தார்.




ஆனாலும், இஷான் கிஷான் தொடர்ந்து அதிரடியாக ஆடியதால் மும்பை அணி 7.1 ஓவர்களில் 103 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களில் ஹோல்டர் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் கட்டுக்கடங்காமல் ஆடி வந்த இஷான் கிஷான் கடைசியில் உம்ரான் மாலிக் பந்தில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சித்தார்த் கவுல் வீசிய 11வது ஓவரில் மும்பை அணியின் முக்கியமான வீரர் பொல்லார்ட் எல்.பி.டபுள்யூ ஆகியதாக கூறி எல்லைக்கோடு வரை சென்றுவிட்டார். ஆனால், மூன்றாவது அம்பயர் முடிவில் நாட் அவுட் என்று தெரியவந்தது.


ஆனால், அவரது அதிர்ஷ்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அபிஷேக்சர்மா வீசிய பந்தில் ஜேசன் ராயிடம் கேட்ச் கொடுத்து பொல்லார்ட் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே அதிரடி வீரர் நீஷம் முதல் பந்திலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் சூர்யகுமார் யாதவ் 24 பந்தில் 50 ரன்களை குவித்தார். 16.4 ஓவர்களில் மும்பை அணி 200 ரன்களை கடந்தது. மறுமுனையில் க்ருணல் பாண்ட்யாவும், கூல்டர் நைலும் ஆட்டமிழந்தாலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிக் கொண்டிருந்தார். 19வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார்.




ஹைதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ் 40 பந்தில் 82 ரன்களை எடுத்து 9வது விக்கெட்டாக வெளியேறினார். கடைசியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணிக்கு 236 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஹைதராபாத் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு அடுத்தபடியாக அபிஷேக் சர்மா 1 ஓவர் வீசி 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.