ஐபிஎல் வரலாற்றில் இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை. போட்டிகள் மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும், இன்னொரு போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளும் மோதுகின்றன.


இந்த சீசனில், சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றுவிட்ட நிலையில், ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளன.  இந்நிலையில், தற்போது நான்காவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது என்றாலும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் போட்டியை எப்படி முடிக்கப்போகின்றது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள், நான்கு முக்கிய அணிகள் மோதுவதால் எந்த போட்டியை எப்படி காண்பது என ரசிகர்கள் குழம்பி இருக்கின்றனர். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்-ல் இரண்டு போட்டிகளும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 


டிவி சேனலைப் பொருத்தவரை,


ஆர்சிபி - டிசி போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலுங்கு


மும்பை - ஹைதராபாத் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, ஸ்டார் விஜய் சூப்பர் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்


மும்பை இந்தியன்ஸ் - ப்ளே ஆஃப் வாய்ப்பு


மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில், மும்பை முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். முதலில் பேட் செய்து 200-க்கும் அதிகமான ரன்களை குவிக்க வேண்டும். இமாலய இலக்கை செட் செய்து, ஹைதராபாத் அணியை 170 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இந்த அசாத்தியமான வெற்றி சாத்தியமானால் மட்டுமே புள்ளி அடிப்படையிலும், ரன் ரேட் அடிப்படையிலும் மும்பை அணியால் கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும்!


டாப் டெல்லி:


13 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மேலும் 2 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நிறைவு செய்யும். பெங்களூரு அணியைப் பொருத்தவரை, 13 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றால், ரன் ரேட் கூடுதலாக இருந்தால் சென்னையை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடிக்கும். எனினும், பெங்களூரு அணி புள்ளிப்பட்ட்டியலில் முன்னேற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 163+ ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அசாத்திய வெற்றி பெறுவது சற்று கடினம் என்பதால், இன்றைய போட்டி முடிவுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை.