துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத்  கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்கு ப்ளே ஆப் வாய்ப்பு உள்ளதால் தொடக்கம் முதல் அவர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முதல் ஓவரிலே விருத்திமான் சஹா டக் அவுட்டானார். 4வது ஓவரில் ஜேசன் ராயும் ஆட்டமிழந்தார்.


ஆட்டத்தின் 6வது ஓவரில் கேப்டன் வில்லியம்சன் 4 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ஆனால், அவர் ஷாகிப் அல் ஹசன் ஓவரில் ஒரு ரன் எடுக்க ஓடும்போது ஷகிப் அல் ஹசனாலே ஆட்டமிழந்தார். அவர் 26 ரன்களை எடுத்து வெளியேறினார். 10 ஓவர்களில் 51 ரன்களை எடுத்த ஹைதராபாத் அணி, 11வது ஓவரில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டையும் இழந்தது.




ஹைதராபாத் அணி 13வது ஓவரில்தான் தனது முதலாவது சிக்ஸரை அடித்தது. அந்த அணியின் பிரியம் கார்க் ஷகிப் அல் ஹசன் பந்தில் சிக்ஸர் அடித்தார். 15 ஓவர்களில் முடிவில் ஹைதராபாத் அணி 79 ரன்களே எடுத்திருந்த நிலையில், கடைசி கட்டத்தில் ஹோல்டர் அதிரடியை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 2 ரன்னில் வெளியேறினார்.


ஹைதராபாத்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல விழுந்த நிலையில் ஒருமுனையில் அப்துல் சமத் தனியாளாக அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். அவர் 18 பந்தில் 25 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். 18.1 ஓவர்களில்தான் ஹைதராபாத் அணி 100 ரன்களை கடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.




ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 21 பந்தில் 26 ரன்களும், அப்துல் சமத் 18 பந்தில் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் எடுத்தனர். 4 வீரர்கள் தவிர பிற வீரர்கள் ஒற்றை இலக்கில் ரன்களை எடுத்தனர். அப்துல் சமத் மற்றும் பிரியம் கார்க் மட்டுமே சிக்ஸர்கள் அடித்தனர். ஹைதராபாத் அணி சார்பில் சுனில் நரைன் மிகவும் கட்டுக்கோப்பாக வீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றாவிட்டாலும் 12 ரன்களே விட்டுக்கொடுத்தார். டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.




ஹைதராபாத் அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஹைதராபாத்தின் பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ள 116 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி எட்டிப்பிடித்தால் அவர்களின் ப்ளே ஆப் வாய்ப்பு இன்னும் எளிதாகிவிடும்.