ஐ.பி.எல். தொடரில் ஷார்ஜாவில் இன்று பஞ்சாப் அணி தனது வாழ்வா? சாவா? ஆட்டத்தில் வலுவான பெங்களூர் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆட, மற்றொரு தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார்.
விராட்கோலியை அவுட்டாக்குவதற்கு 3வது மற்றும் 4வது ஓவரில் கிடைத்த பொன்னான வாய்ப்பை பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர். மேலும், தேவ்தத் படிக்கல்லிற்கு பிடித்த கேட்ச்சையும் மூன்றாவது நடுவர் அவுட் என தர மறுத்ததால் பஞ்சாப் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த விராட்கோலி ஹென்ரிக்ஸ் வீசிய 10வது ஓவரில் 25 ரன்கள் எடுத்த நிலையில் போல்டானார். அவரை அடுத்து களமிறங்கிய டேன் கிறிஸ்டியன் சந்தித்த முதல் பந்திலே அவுட்டாகினார்.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் விழுந்த சிறிது நேரத்திலே ஹென்ரிக்சின் இரண்டாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த மேக்ஸ்வேல்- டிவிலியர்ஸ் ஜோடி ரன்களை துரிதமாக சேர்த்தனர். குறிப்பாக, மேக்ஸ்வேல் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. பிஷ்னோய் பந்தில் அடித்த சிக்சர் சாலையில் வாகனங்களுக்கு நடுவில் சென்று விழுந்தது.
அதிரடியாக ஆடிய மேக்ஸ்வேல் 29 பந்தில் அரைசதம் கடந்தார். மேக்ஸ்வேலின் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும். 18.2 ஓவர்களில் பெங்களூர் 146 ரன்களை எடுத்திருந்தபோது டிவிலியர்ஸ் 23 ரன்களில் ரன் அவுட்டானார். ஆனாலும், மேக்ஸ்வேல் தனது அதிரடியை தொடர்ந்து கொண்டே இருந்தார். ஷமி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 33 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வேல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஷபாப், கார்டன் இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கினார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. ஹர்ஷல் 1 ரன்னுடனும், பரத் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் ஹென்ரிக்ஸ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 12 ரன்களே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்களில் 42 ரன்களை வாரி வழங்கினார்.