புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி தனது ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பதற்கான போட்டியில் பெங்களூர் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கேப்டன் விராட் கோலி நிதானமாக ஆட, தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார். ஹென்ரிக்ஸ் வீசிய 10வது ஓவரில் 25 ரன்கள் எடுத்த கேப்டன் கோலி போல்டானார். அவர் அவுட்டாகிய அடுத்த பந்திலே டேன் கிறிஸ்டியன் அவுட்டானார். ஹென்ரிக்சின் இரண்டாவது ஓவரில் தேவ்தத் படிக்கல் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்த நிலையில், ஜோடி சேர்ந்த மேக்ஸ்வேல்- டிவிலியர்ஸ் ஜோடி ரன்களை துரிதமாக சேர்த்தனர். சிக்ஸர், பவுண்டரி என்று அதிரடியாக ஆடிய மேக்ஸ்வேல் 29 பந்தில் அரைசதம் கடந்தார். மேக்ஸ்வேல் தொடர்ச்சியாக அடிக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.
ஷமி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 33 பந்தில் 57 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வேல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. ஹென்ரிக்ஸ், ஷமி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுலும்,மயங்க் அகர்வாலும் அதிரடியான தொடக்கத்த அளித்தனர். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் 23 ரன்கள் எடுத்தபோது தொடரில் 513 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
மயங்க் அகர்வால் – கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஷாபாஸ் பந்தில் கே.எல்.ராகுல் 39 ரன்களில் அவுட்டாகினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 36 பந்தில் அரைசதம் அடித்தார். நிகோலஸ் பூரன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பஞ்சாப் வெற்றிக்கு 30 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மயங்க் அகர்வால் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் ஆட்டமிழந்த சிறிதுநேரத்தில் சர்ப்ராஸ்கான் சாஹல் பந்தில் போல்டானார். பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்த மார்க்ரம் 17வது ஓவரில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்காக தமிழக வீரர் ஷாரூக்கான் போராடினார்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலே நம்பிக்கை அளித்த ஷாரூக்கான் ரன் அவுட் ஆனார். 2,3,4வது பந்தில் தலா ஒரு ரன்கள் மட்டுமே பஞ்சாப் வீரர்கள் எடுத்தனர். 5வது பந்தில் ஹென்ரிக்ஸ் சிக்ஸ் அடித்தார். ஒரு பந்தில் பஞ்சாப் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பஞ்சாப் ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி பெற்று மூன்றாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வி மூலம் பஞ்சாப் அணி தனது ப்ளே ஆப் வாய்ப்பிற்காக மற்ற அணிகளின் வெற்றி, தோல்விக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.