ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன.


பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்


விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனீல் நன்றாகவே விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், 7இல் வெற்றியும், 4இல் தோல்வியும் பெற்று 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றா பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய தெம்புடன் பெங்களூர் அணி உள்ளது. கேப்டன் கோலி, தேவ்தத் படிக்கல் நல்ல பார்மில் உள்ளனர். இவர்கள் தொடர்ந்து நல்ல தொடக்கத்தை கொடுத்துவருகின்றனர். மேக்ஸ்வெல், பரத் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து டிவில்லியர்ஸ் கலக்கினால் இன்றைய போட்டியில் கெத்துகாட்டி விடலாம்.






பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த சீசனில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் இருக்கிறது. பிளே-ஆப் சுற்றில் நீடிக்கும் அந்த அணி, எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதில், ஒன்றில் தோற்றால் கூட வெளியேறிவிடும். அதனால், வெற்றி பெறும் முனைப்புடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது. நடப்பு தொடரில் பெங்களூர் அணியை வீழ்த்தியிருப்பதால், அதே தெம்புடன் இன்று விளையாடும். முக்கியமான இந்த ஆட்டத்தில், ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் விளையாட வேண்டும். கடந்த போட்டியில் வெற்றியை பெற்றுக்கொடுத்த தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் மீது இன்றையபோட்டியில் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்போட்டி ஷார்ஜாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 


மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியும், 7இல் தோல்வியும் பெற்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, ரன் ரேட் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கு. பிளே ஆப் வாய்ப்பை இழந்த  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விளையாடும். துபாயில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.