அபுதாபியில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. டாசில் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியது முதல் பாப் டுப்ளிசும், ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடியாக ஆடினர். பாப் டுப்ளிசிஸ் 25 ரன்களில் வெளியேறிய நிலையில், சுரேஷ் ரெய்னா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.


அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 14வது ஓவரில் அரைசதம் கடந்தார். மேலும், 15வது ஓவரில் கெய்க்வாட் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் ருதுராஜ் தொடர்ந்து சிறப்பாக ஆடினார்.





கடைசி ஓவரில் ருதுராஜ் சதமடிப்பதற்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதையடுத்து, 20வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஐ.பி.எல். தொடரில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். மேலும், இந்த தொடரில் முதலாவதாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  189 ரன்களை குவித்தது. கெய்க்வாட் 101 ரன்களுடனும், ஜடேஜா 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.




இதையடுத்து, சென்னை அணி நிர்ணயித்த 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஷ்வால் – லீவிஸ் ஜோடி மிரட்டலான தொடக்கத்தை கொடுத்தனர். குறிப்பாக, ஜெய்ஷ்வால் 19 பந்தில் அரைசதம் கடந்தார். ராஜஸ்தான் அணி 5 ஓவர்களில் 75 ரன்களை கடந்தது. தொடக்க வீரர் லீவிஸ் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்த நிலையில், தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சென்னை அணிக்கு பீதியை கிளப்பிக் கொண்டிருந்த ஜெய்ஷ்வால் அறிமுக பந்துவீச்சாளர் ஆசிப் வீசிய முதல் பந்திலே தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


இதையடுத்து, கேப்டன் சஞ்சு சாம்சனும், ஷிவம் துபேவும் இணைந்து இலக்கை நோக்கி ஆடினர். ராஜஸ்தான் அணி 8.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 119 ரன்களை குவித்தது. சாம்சன் நிதானமாக ஆட மறுமுனையில் ஷிவம் துபே அதிரடியாக ஆடினார். மொயின் அலி, சாம்கரன், ஜடேஜா என யார் வீசினாலும் ஷிவம் துபே பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். ராஜஸ்தான் அணி 13வது ஓவரிலே 150 ரன்களை எட்டியது. ரன் ரேட் ஓவருக்கு 12 என்ற விகிதத்தில் சென்று கொண்டிருந்தது. அதிரடியாக ஆடிய ஷிவம்துபே 31 பந்தில் தனது முதலாவது அரைசதத்தை கடந்தார்.




ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இறுதியில் 30 பந்துகளில் 25 ரன்களே தேவைப்பட்டது. ஆட்டம் ராஜஸ்தானின் கைக்குள் வந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 24 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாம் கரன் வீசிய ஓவரில் கிடைத்த ப்ரீ-ஹிட் பந்தில் பவுண்டரி அடித்த கிளன் பிலிப்ஸ், அதே ஓவரில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் டென்சனை குறைத்தார். 15 பந்துகள் மீதம் வைத்து ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தானை வெற்றி பெற வைத்த ஷிவம் துபே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 ரன்களை குவித்தார். இதன்மூலம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் தனது வாய்ப்பை ராஜஸ்தான் இன்னும் தக்கவைத்துள்ளது. ஆட்டநாயகன் விருது சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் மும்பையை 7வது இடத்திற்கு கீழே தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.