ஐ.பி.எல். தொடரின் 39வது ஆட்டம் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூர் மற்றும் 6-வது இடத்தில் மும்பை அணியும் மோதுகின்றன,


ஐ.பி.எல். வரலாற்றில் 6 முறை சாம்பியனான மும்பை அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணி 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.




மும்பை அணி பெங்களூருக்கு எதிராக அதிகபட்சமாக ஒரு போட்டியில் 213 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் அணி அதிகபட்சமாக ஒரு போட்டியில் 235 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணி குறைந்தபட்சமாக ஒரு போட்டியில் 115 ரன்களை எடுத்துள்ளது. பெங்களூர் அணி மும்பைக்கு எதிராக குறைந்தபட்சமாக 108 ரன்களை எடுத்துள்ளது.


பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிராக பெங்களூர் கேப்டன் விராட்கோலி 728 ரன்களை குவித்துள்ளார். ஏபி டிவிலியர்ஸ் அதற்கு அடுத்த இடத்தில் 682 ரன்களை குவித்துள்ளார், மும்பை அணி சார்பில் பெங்களூர் அணிக்கு எதிராக அதிகபட்சமாக பொல்லார்ட் 546 ரன்களை குவித்துள்ளார்.




பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஹர்பஜன்சிங் 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்பிரித் பும்ரா 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளார். பெங்களூர் அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக பெங்களூர் அணி சார்பில் அதிரடி வீரர் ஏபிடிவிலியர்ஸ் 133 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயிலும், விராட் கோலியும் ஆட்டமிழக்காமல் 92 ரன்களை சேர்த்துள்ளனர். மும்பை அணி சார்பில் இளம் வீரர் இஷான்கிஷான் 99 ரன்களை அதிகபட்சமாக ஒரு போட்டியில் குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா 94 ரன்களை குவித்துள்ளார்.




ஒரு போட்டியில் பெங்களூர் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக தில்ஹாரா பெர்னாண்டோ 18 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.