இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று நடந்த முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிட்டல்ஸ் அணி களம் கண்டது. தொடக்க ஆட்டக்காரர்களில் ரன் சேர்க்க தடுமாறிய ஷிகர் தவான் 7 ரன்னில் அவுட் ஆன நிலையில், மறுமுனையில் இருந்த பிருத்வி ஷா அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். எனினும் அவருடன் மறுமுனையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் பட்டேல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் களத்தில் இருந்த கேப்டன் ரிஷப் பண்ட் – சிம்ரான் ஹெட்மியர் ஜோடி விக்கெட் சரிவை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி துரத்திய சென்னை அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து இருந்தாலும் தொடர்ந்து வந்த ராபின் உத்தப்பா மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடன் கைகொடுத்து ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டும் மறுமுனையில் அதிரடி காட்டினார். கேப்டன் தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது பாணியில் ஆட்டத்தை முடித்து வைத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 173 ரன்கள் கொண்ட இலக்கை சென்னை அணி 20 ஓவர்களில் 2 பந்துகள் மீதம் இருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



இதன் மூலம் கடந்த 12 சீசன்களில் 9-வது முறையாக சிஎஸ்கே அணியை தல தோனி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 & 2021 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கே கேப்டன் தோனி தனது 10-வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார் (2017-ல்புனே சூப்பர் ஜெயின்ட்ஸ்). இதுவரை ஐபிஎல் ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டியில் 6 முறை சேஸிங் எடுத்து 6 முறையும் தோனி அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து வந்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வந்தன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட தோனியின் பேட்டிங் முறையை கிண்டலாக விமர்சித்தனர். ஆனால், அனைத்திற்கும் தனது பேட்டால் தோனி பதில் அளித்தார்.



தோனி மீது பல விமர்சனங்கள் இருக்கும் நேரத்தில் கடைசியாக பவுண்டரி அடித்து வெற்றியை தேடித்தந்த காட்சியை கண்ட அனைவரும் நெகிழ்ந்தனர். அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். பலர் தோனியின் பழைய வெற்றி பாணியை கண்டதில் நெகிழ்ந்துபோய் கண்கள் நனைய ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர். அரங்கில் இருந்தவர்கள் மட்டுமின்றி இதனை டிவியில் கண்ட பலரும் உணர்ச்சி பொங்க சமூக வலைதளங்களில் பதிவுகள் இட்டனர். முக்கியமாக அரங்கில் அமர்ந்திருந்த தோனியின் மனைவி சாக்ஷி தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார். அது விடியோவாக பதிவாகி இன்டர்நெட்டில் வைரலானது. சாக்ஷியின் அருகில் தோனி மகள் ஜிவா வெற்றி பெற்ற மகிழ்வில் குதித்துக்கொண்டிருந்தார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியால் தோனி இன்னொருமுறை தானொரு பெஸ்ட் ஃபினிசர் என்று நிரூபித்துள்ளார். இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோத வேண்டும்.