ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த சில போட்டிகளில் களமிறங்காத சுரேஷ் ரெய்னா இந்த போட்டியிலும் களமிறங்கவில்லை. டெல்லி அணியில் ரிப்பல் படேலுக்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி வீரர் ப்ரித்வி ஷா ஆட்டம் தொடங்கிய முதல் அதிரடியாக ஆடினார். தீபக்சாஹர் வீசிய 3வது ஓவரில் மட்டும் 4 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், மறுமுனையில் அதிரடியை தொடங்கும் முன் ஷிகர் தவான் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.




மூன்றாவது விக்கெட்டிற்கு ரிஷப் பண்ட் அல்லது ஹெட்மயர் இறங்குவார் என்று இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்‌ஷர் படேல் களமிறங்கினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய பிரித்விஷா அதிரடியாக அரைசதம் கண்டார். டெல்லியில் பரிசோதனை முயற்சியாக களமிறக்கப்பட்ட அக்ஷர் படேல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்தது.


ஜடேஜா வீசிய 11வது ஓவரில் டெல்லி அணிக்காக அதிரடியாக ரன்களை குவித்துக் கொண்டிருந்த பிரித்விஷா 7 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, டெல்லி கேப்டன் ரிஷப்பண்டும் – ஹெட்மயரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். 14வது ஓவரில் டெல்லி அணி 100 ரன்களை கடந்தது.




இதையடுத்து, ஹெட்மயரும், ரிஷப் பண்டும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியில் இறங்கினார். இருவரும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகளை விளாசினார். இதனால், டெல்லி அணி 17.2 ஓவர்களில் 150 ரன்களை கடந்தது. டெல்லி அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஹெட்மயர் 28 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில்  ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் ரன் ஏதும் எடுக்கவில்லை. நான்காவது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்தில் ரிஷப் பண்ட் நான்கு ரன்களை எடுத்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்களில் 172 ரன்களை குவித்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 49 ரன்களுடனும், டாம்கரன் ஆட்டமிழக்காமலும் களத்தில் உள்ளனர்.