நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதியது. மும்பை அணி 250 ரன்களை குவித்து, ஹைதராபாத் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ப்ளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருந்தது.


இதற்காக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷான் முதல் ஓவர் முதலே சிக்ஸர், பவுண்டரி என்று மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் பந்தை பறக்கவிட்டார். 16 பந்துகளில் அரைசதம் அடித்த இஷான்கிஷான் 32 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து வெளியேறினார்.




உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இஷான் கிஷான் இடம்பிடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக அவரது பார்ம் கவலைக்குரிய நிலையில் இருந்த நிலையில் நேற்றை ஆட்டம் மூலம் அவர் தனது இயல்பான பார்மிற்கு திரும்பினார். இந்த போட்டிக்கு பிறகு பேட்டி அளித்த இஷான்கிஷான் பேசியதாவது,


“ எனக்கு ஆட்டத்தை தொடங்குவது மிகவும் பிடிக்கும். விராட்கோலி என்னிடம் ‘உன்னை தொடக்க வீரராக தேர்வு செய்துள்ளோம்.  அதற்கு தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அணி நல்ல ரன்களை எடுத்ததும், உலககோப்பைக்கு முன்பு நல்ல ஆட்டம் கிடைத்திருப்பதும் எனககு நல்ல விஷயம். மனதளவில் நன்றாக உணர்கிறேன். உம்ரான் மாலிக் பந்தில் கவர்திசையில் அடித்த ஷாட் என்னுடைய ஆஸ்தான ஷாட் ஆகும்.




நான் விராட்கோலியிடமும், பும்ராவிடமும் நன்றாக உரையாடுவேன். அவர்கள் எனக்கு உதவிகரமாக உள்ளனர். அனைவரும் எனக்கு ஆதரவாகவும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறாய். இங்கிருந்து கற்றுக்கொள். செய்த தவறுகளை வரும் உலககோப்பையிலும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.“


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


உலகக் கோப்பை போட்டித் தொடர் போட்டிகள் ஐ.பி.எல். போட்டித் தொடர் நடைபெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெற உள்ளது. வரும் 19-ந் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் இஷான்கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மூவரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.


இவர்கள் மூவரது பேட்டிங் பார்மும் ஐ.பி.எல். இரண்டாம் பாதியில் இருந்து மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்றைய போட்டியில் இஷான்கிஷானுடன், சூர்யகுமார் யாதவும் தனது பார்மை மீட்டுள்ளார். அவர் 40 பந்தில் 13 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் குவித்து மும்பை அணி 235 ரன்களை குவிக்க முக்கிய காரணமாக அமைந்தார். ஹர்திக் பாண்ட்யா மட்டும் இன்னும் பார்முக்கு திரும்பாமல் இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ரசிகர்களுக்கும் கவலை அளிக்கிறது.