2021 ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையோடு லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில், துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி துபாய் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஏற்கனவே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இன்று நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று டாப் இடத்தில் நிறைவு செய்யும் முனைப்பில் தோனி தலைமையிலான சிஎஸ்கே களமிறங்கும். பஞ்சாப் அணியைப் பொருத்தவரை, நான்காவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இதுவே கடைசி வாய்ப்பு. அதிரடியான வெற்றியைப் பதிவு செய்தால் மட்டுமே பஞ்சாப்பின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமாகும்.
புள்ளிப்பட்டியல்: யார் யார் எந்த இடத்தில்?
இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக் போட்டி என்பதால், இன்றைய போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரின் 52-வது போட்டியின் முடிவில், புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், 16 புள்ளிகளுடன் மூன்றாவது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளன.
டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மீதமிருக்கும் நிலையில், சென்னை தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்தில் நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிறப்பான ரன் ரேட் வைத்திருக்கும் சென்னை அணி, இன்றைய போட்டியில் தோல்வி அடைந்து, பெங்களூரு அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலுமே தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றது.
பஞ்சாப் அணி, 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், நான்காவது இடத்திற்காக கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மூன்று அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், கொல்கத்தா, மும்பை அணிகளைவிட பஞ்சாப் இரண்டு புள்ளிகள் பின் தங்கி இருக்கின்றது. இதனால் இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
சென்னை vs பஞ்சாப்: நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 25 போட்டிகளில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதியுள்ளன. இதில், 25 போட்டிகளில் சென்னை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பஞ்சாப் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இன்றைய போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில், இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மோதியுள்ளன. இதில், சென்னை அணியே வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகள் மோதி கொண்ட முதல் போட்டியிலும், சென்னை அணிக்கே வெற்றி. காயம் காரணமாக சென்னை அணி வீரர் சாம் கரன், இந்த ஐபிஎல் சீசனில் மீதமிருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இதனால், அவருக்கு பதிலாக, வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டாமினிக் டிராக்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
முதலில் பேட்டிங் செய்து சென்னை 8 முறையும், பஞ்சாப் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் ரெக்கார்டை பொருத்தவரை, சென்னை 8 முறையும், பஞ்சாப் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்