2021 ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளே உள்ள நிலையில், ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டன. ஆனால், நான்காவது இடத்துக்காக கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.


இந்நிலையில், 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் களத்தில் இருக்கும் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியுள்ளது. எனினும், மீதமிருக்கும் மூன்று அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதால், கடைசி லீக் போட்டி வரை பரபரப்பு இருக்கும் என தெரிகிறது. கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில்தான் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன. 






இந்த ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி, நடப்பு சாம்பியனான மும்பைக்கு சொதப்பலாகவே அமைந்துள்ளது. இரண்டாம் பாதி போட்டிகளில் மும்பை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே மும்பை வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீதமிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெருவாரியான வித்தியாசத்தில் ரன் ரேட்டுக்கு சாதகமான முறையில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.


ராஜஸ்தானைப் பொருத்தவரை, கடைசிப் போட்டியில் வலுவான சென்னை அணியை தோற்கடித்து அதிரடி காட்டியது. ஆனால், இந்த சீசனில் கன்சிஸ்டண்டாக வெற்றிகள் பெறாததால், ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பு தள்ளிப்போனது. கடைசியாக, மீதமிருக்கும் போட்டிகளிலும் அதிரடி வெற்றிகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று மும்பையை எதிர்கொள்ள களமிறங்குகிறது ராஜஸ்தான்.


மும்பை vs ராஜஸ்தான் - நேருக்கு நேர்


இதுவரை 26 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 13 முறையும், ராஜஸ்தான் 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு மோதியதில்லை. நடப்பு ஐபிஎல் சீசனைப் பொருத்தவரை, இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. 


இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்து மும்பை அணி 8 முறையும், ராஜஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சேஸிங் ரெக்கார்டைப் பொருத்தவரை, ராஜஸ்தான் 10 போட்டிகளில் வெற்றிகரமாக சேஸ் செய்து வென்றுள்ளது, மும்பை 5 முறை வெற்றி பெற்றுள்ளது.