அபுதாபியில் இன்று நடைபெற்ற 48வது ஐ.பி.எல். ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. டாசில் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.


இதையடுத்து, சென்னை அணியின் பேட்டிங்கை தொடங்கிய ருதுராஜ் முதல் ஓவரிலே இரு பவுண்டரிகளுடன் 10 ரன்களை எடுத்தார். ஆட்டம் தொடங்கியது முதல் பாப் டுப்ளிசும், ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடியாக ஆடினர். இந்த நிலையில், ராகுல் திவேதியா பந்தில் அதிரடியாக ஆடிய பாப் டுப்ளிசிஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னாவும் ராகுல் திவேதியா பந்தில் ஷிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் இழந்ததால் சென்னை அணி 10 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்தது.




அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 14வது ஓவரில் அரைசதம் கடந்தார். மேலும், 15வது ஓவரில் கெய்க்வாட் அடுத்தடுத்து இரு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். அதே ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற மொயின் அலியை சஞ்சு சாம்சன் ஸ்டம்பிங் செய்தார். ஆனால், மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 16வது ஓவரில் மட்டும் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 16 ரன்களை ருதுராஜ் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த ஓவரில் அம்பத்தி ராயுடு 2 ரன்னில் வெளியேறினார்.


இந்த போட்டியில் தனது அதிரடி மூலம் அதிக ரன்களை அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை ருதுராஜ் கைப்பற்றினார். அவர் இந்த தொடரின் முதன்முறையாக 500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.




கடைசி ஓவரில் ருதுராஜ் சதமடிப்பதற்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். முதல் மூன்று பந்திலே ஒரு வைடுடன் சேர்த்து 15 ரன்களை ஜடேஜா விளாசினார். ஆனால், 5வது பந்தில்தான் ருதுராஜிற்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த பந்தில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 1 பந்தில் 6 ரன்கள் எடுத்தால் தனது முதலாவது சதம் மற்றும் இந்த தொடரின் முதல் சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு ருதுராஜிற்கு கிடைத்தது. ருதுராஜூம் ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  189 ரன்களை குவித்தது. ருதுராஜ் ஆட்டமிழக்காமல் 101 ரன்களை குவித்தார். ஜடேஜா 32 ரன்களை எடுத்தார்.