ஐ.பி.எல். தொடரில் ஷார்ஜாவில் இன்று டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை களமிறங்கியது. டாசில் வென்ற டெல்லி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தை ரோகித் சர்மாவும், குயின்டின் டி காக்கும் தொடங்கினர். ஆட்டத்தை பவுண்டரியுடன் தொடங்கிய ரோகித் சர்மா, ஆவேஸ்கான் வீசிய இரண்டாவது ஓவரில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.


சிறிதுநேரத்தில், அக்ஷர் படேல் பந்துவீச்சில் 19 ரன்கள் எடுத்திருந்த குயின்டின் டி காக்கும் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சூர்யகுமார் யாதவ் துரிதமாக ரன்களை சேர்த்தார். ஆனால், சிக்ஸருக்கு ஆசைப்பட்டு சூர்யகுமார் யாதவும் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 33 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.





கடைசி கட்டத்தில் பொல்லார்ட் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்,. டேஞ்சர் பேட்ஸ்மேன் பொல்லார்ட் 6 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார். மும்பை வீரர்கள் நிறைய பந்துகளை டாட் செய்ததால், மும்பை அணி 17வது ஓவர் முடிவில்தான் 100 ரன்களை கடந்தது. இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆவேஸ்கான், அக்ஷர் படேல் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால், அஸ்வின் 4 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.


இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிக்ஸர் அடித்து மிரட்டிய ஷிகர் தவான், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடியபோது 8 ரன்னில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட்டாகிய சிறிது நேரத்தில் பிரித்விஷாவும் 6 ரன்னில் அவுட்டாகினார். ஸ்டீவ் ஸ்மித் கூல்டர் நைல் வீசிய முதல் பந்திலே போல்டாகி டெல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.





இதையடுத்து, கேப்டன் ரிஷப் பண்டும், முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ரன்களை சேர்த்த ரிஷப்பண்ட் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த அக்ஷர் படேல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், டெல்லி வெற்றிக்கு 48 பந்தில் 50 ரன்கள் தேவைப்பட்டது.  


அப்போது, 14வது ஓவரில் ஹெட்மயரின் இரண்டு பவுண்டரிகளுடன் டெல்லிஅணியினர் 13 ரன்கள் எடுத்தனர். அடுத்த ஓவரிலே ஹெட்மயர் ஆட்டமிழந்தார். கடைசியில் டெல்லியின் வெற்றிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணியின் வெற்றிக்காக அஸ்வினுடன் இணைந்து ஸ்ரேயாஸ் அய்யர் போராடினார். இந்த நிலையில், இறுதியில் டெல்லி அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. 20 ஓவரை குருணால் பாண்ட்யா வீசினார். ஆனால், அவர் வீசிய முதல் பந்திலே அஸ்வின் சிக்ஸர் அடித்து டெல்லியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி மூலம் கடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் தங்களை தோற்கடித்த மும்பை அணியை டெல்லி அணி பழிதீர்த்துள்ளது.




ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 33 ரன்களையும், அஸ்வில் 21 பந்துகளில் 1 சிக்ஸருடன் 20 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர். வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்திருப்பதால், நடப்பு சாம்பியன் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.