துபாயில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத்  கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். விருத்திமான் சஹா, ஜேசன் ராய் ஆட்டமிழக்க வில்லியம்சன் அதிரடியில் இறங்கினார்.


6வது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசிய வில்லியம்சன், ஒரு ரன் எடுக்க ஓடியபோது ஷாகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 10வது ஓவரில்தான் 50 ரன்களை கடந்தது. 13வது ஓவரில்தான் ஹைதராபாத்தின் முதல் சிக்ஸரை பிரியம் கார்க் அடித்தார்.




ஹைதராபாத்தின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல விழுந்ததாலும், அணியின் ஸ்கோரை உயர்த்த போராடிய அப்துல் சமத்தும் 18 பந்தில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். 100 ரன்களை கடக்குமா என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களே எடுத்தது. டிம் சவுதி, ஷிவம் மாலி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ப்ளே ஆப் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிட்ட ஹைதராபாத் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மன் கில்லும், வெங்கடேஷ் அய்யரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா அணியின் இளம் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் அய்யர் 8 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும்- ராகுல் திரிபாதியும் துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆனால், ரஷீத்கான் பந்தில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ராகுல் திரிபாதி அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.




இதையடுத்து, ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும், நிதிஷ்ராணாவும் விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதற்காக மிகவும் நிதானமாக ஆடினர். இதனால், 11 ஓவர் முடிவில்தான் கொல்கத்தா 50 ரன்களை கடந்தது.  அணியின் ஸ்கோர் அரைசதத்தை கடந்த பிறகு சுப்மன்கில் அதிரடியில் இறங்கினர். ஹோல்டர் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.


தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில் 44 பந்தில் அரைசதத்தை கடந்தார். கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 பந்தில் 32 ரன்களே தேவைப்பட்டது. சுப்மன்கில் – நிதிஷ்ராணா ஜோடி பார்ட்னர்ஷிப் பொறுப்பாக ஆடி 57 பந்தில் 50 ரன்களை கடந்தது. கொல்கத்தா வெற்றிக்கு அருகில் நெருங்கிய நேரத்தில் சுப்மன்கில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுப்மன்கில்லிற்கு பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 5 ரன்கள் எடுத்தபோது ஐ.பி.எல். போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.




நிதிஷ் ராணா 25 ரன்களில் வெளியேறிய நிலையில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 6 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக் 14 ரன்களுடனும், கேப்டன் மோர்கன் 2 ரன்களுடனும் கொல்கத்தாவை வெற்றி பெறச்செய்தனர். இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி தனது ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தை நல்ல ரன்ரேட்டில் தக்கவைத்துள்ளது.