ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லும், வெங்கடசும் நிதானமாக ஆடினர். பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.




தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், 35 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த வெங்கடேஷ் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு நிதிஷ் ராணா களமிறங்கினார். களமிறங்கியது முதல் ராணா அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். அவர் அதிரடியாக  5 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்கள் எடுத்திருந்தபோது பிலிப்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ராகுல் திரிபாதியும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர். இதனால், 12.1 ஓவர்களில் கொல்கத்தா 100 ரன்களை எடுத்தது.




தொடர்ந்து சிறப்பாக ஆடிய சுப்மன்கில் 40 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் சுப்மன்கில் 56 ரன்களில் கிறிஸ் மோரிஸ் பந்தில் ஜெய்ஷ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வீரர்கள் அதிரடி ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் மைதானத்தின் கூரைக்கு சென்றது.




அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 14 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சக்காரியா பந்தில் போல்டாகி வெளியேறினார். ராகுல் திரிபாதி ஆட்டமிழந்த பிறகு கொல்கத்தாவின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 150 ரன்களை கடந்தது. கிறிஸ் மோரிஸ் வீசிய கடைசி ஓவரில் கொல்கத்தா அணி 16 ரன்களை எடுத்தது. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை குவித்தது. மோர்கன் 13 ரன்னுடனும், தினேஷ் கார்த்திக் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா, ராகுல்திவேதியா, கிளன் பிலிப்ஸ் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் மிகவும் மோசமான கீப்பிங்கை செய்தார்.