துபாயில் நடைபெறற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. லீக் ஆட்டங்களில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி போட்டியாகும். கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததது. தொடக்க வீரர் ருதுராஜ் 12 ரன்னில் வெளியேறிய சிறிது நேரத்தில் மொயின் அலி டக் அவுட்டானார்.
கடந்த போட்டியில் சொதப்பிய ராபின் உத்தப்பாவும், கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அம்பத்தி ராயுடுவும் கிறிஸ் ஜோர்டன் பந்துவீச்சில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் களமிறங்கிய தோனி, ரவி பிஷ்னோய் பந்தில் 12 ரன்களில் போல்டானார் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் விழுந்ததால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் டுப்ளிசியும், ஜடேஜாவும் நிதானமாக ஆடினர். மைதானம் நன்றாக பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததாலும், பஞ்சாப் சிறப்பாக பந்துவீசியதாலும் சென்னை வீரர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. பாப் டுப்ளிசி 46 பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். சென்னை அணி 18வது ஓவரில்தான் 100 ரன்களையே கடந்தது. கடைசியில் 19வது ஓவரின் கடைசி பந்தில்தான் சென்னை அணி தனது முதலாவது சிக்சரையே அடித்தது. அர்ஷ்தீப் பந்தில் பாப் டுப்ளிசி அந்த சிக்ஸரை அடித்தார்.
ஷமி வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்த பாப் டுப்ளிசிஸ் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 55 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும், அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிறிஸ் ஜோர்டன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மும்பை அணியை விட ரன்ரேட்டில் முன்னேற வேண்டும் என்றால் பஞ்சாப் அணி இந்த இலக்கை 14 ஓவர்களில் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாபிற்கு கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் அதிரடி தொடக்கத்தை அளித்தனர். மயங்க் அகர்வால் 12 ரன்களிலும், சர்ப்ராஸ் கான் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.
ஆனால், கே.எல்.ராகுல் தனது அதிரடியை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் 25 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்தார். அவருக்கு பார்ட்னர்ஷிப் அளித்த ஷாரூக்கான் 8 ரன்னில் வெளியேறினார். இருப்பினும் பஞ்சாப் அணி 10.2 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எடுத்தது. ப்ராவோ வீசிய 12 ஓவரில் மட்டும் கே.எல்.ராகுல் 18 ரன்களை விளாசினார். வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் மார்க்ரம் 13 ரன்களுக்கு வெளியேறினார். ஆனால், ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுலின் அதிரடியால் 13 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 42 பந்தில் 7 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 98 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் தோற்றதன் மூலமாக சென்னை தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.