ஐ.பி.எல். தொடரின் 31-வது ஆட்டம் இன்று அபுதாபியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.


புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணியும், 7வது இடத்தில் கொல்கத்தா அணியும் மோதுவதால் இரு அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமான ஆட்டமாகும். ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளுமே இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 போட்டிகளிலும், பெங்களூர் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூர் அணி தனது அதிகபட்ச ஸ்கோராக 213 ரன்களை கொல்கத்தாவிற்கு எதிராக எடுத்துள்ளது. கொல்கத்தா அணி பெங்களூருக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோராக 222 ரன்களை பதிவு செய்துள்ளது. அதேபோல, பெங்களூர் அணியை கொல்கத்தா அணி 49 ரன்களில் சுருட்டியது அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.




கொல்கத்தா அணி 84 ரன்களில் சுருண்டதே பெங்களூர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக இந்த தொடரின் முதல் பாதியில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூர் அணி 208 ரன்கள் குவித்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிகபட்சமாக விராட்கோலி 725 ரன்களை குவித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 557 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தா அணி சார்பில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் 530 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.


இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 27 போட்டிகளில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் சுனில் நரேன் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். பெங்களூர் அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மூன்றாவது இடத்தில் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் வினய் குமார் 2008ம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




விராட் கோலி இந்த ஐ.பி.எல். தொடருடன் பெங்களூர் அணியில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நேற்று அறிவித்த நிலையில், இன்று பெங்களூர் அணி களமிறங்குகிறது. இதனால், மைதானத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலியுடன் பெங்களூர் அணியில் ஏபி டிவிலியர்ஸ், தேவ்தத் படிக்கல், சாஹல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல, கொல்கத்தா அணியும் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் கேப்டன் இயான் மோர்கன், ரஸல், தினேஷ் கார்த்திக், பெர்குசன், பாட் கமின்ஸ், சுப்மன் கில், சுனில் நரேன், ராகுல் திரிபாதி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ககப்படுகிறது.