ஐ.பி.எல். 2021-ஆம் ஆண்டிற்கான எஞ்சிய ஆட்டங்கள் துபாயில் உள்ள மைதானத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது. இரண்டாம் பாதியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டு ப்ளிசிஸ், மொயின் அலி, ரெய்னா, தோனி ஆகியோர் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.


தனி ஆளாக போராடிய ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 88 ரன்களை குவித்தார். இறுதியில், ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும், ப்ராவோ 23 ரன்களும் எடுத்ததால் சென்னை அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்த களமிறங்கிய மும்பை அணி ப்ராவோ, தீபக் சாஹர் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 136 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.


கடந்த ஐ.பி.எல். தொடர் முதல் சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி ஆடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்திருந்தார்.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் மைக் ஹஸ்ஸி 86 ரன்கள் எடுத்திருந்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்து வந்தது. ஹஸ்ஸி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்திருந்தார். 8 ஆண்டுகளாக நீடித்து வந்த மைக் ஹஸ்ஸியின் சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் நேற்று முறியடித்தார். நேற்றைய போட்டியில் 88 ரன்கள் குவித்ததன் மூலம் மும்பை அணிக்கு எதிராக தனிநபராக அதிகபட்ச ரன்களை குவித்த சென்னை வீரர் என்ற சாதனையை படைத்தார்.




கெய்க்வாட்டிற்கு அடுத்த இடத்தில் மைக் ஹஸ்ஸி உள்ளார். மைக் ஹஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 83 ரன்களுடன் உள்ளார். இதில் ஒற்றுமையான விஷயம் என்னவென்றால், மூன்று பேரும் மும்பை அணிக்கு எதிராக இந்த ஸ்கோரை எடுத்தபோது ஆட்டமிழக்கவில்லை என்பதுதான்.


ருதுராஜ் கெய்க்வாட்டின் அபார பேட்டிங்கால் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது. டெல்லி அணியும் 12 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன் விகித அடிப்படையில் சென்னை அணி முதலிடத்தை பிடித்தது.


ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் 88 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்த 5வது வீரர் என்ற இடத்தை அடைந்துள்ளார். மேலும், சென்னை அணி சார்பில் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள இரண்டாவது வீரர் என்ற இடத்திலும் உள்ளார். பாப் டு ப்ளிசிஸ் 320 ரன்களுடன் சென்னை அணி சார்பில் முதலிடத்தில் உள்ளார்.  ருதுராஜ் இதுவரை 8 போட்டிகளில் ஆடி 284 ரன்களை குவித்துள்ளார். நடப்பு தொடரில் மட்டும் இதுவரை 3 அரைசதங்களை அடித்துள்ளார்.


மேலும் படிக்க : CSK in IPL: நடப்பு சாம்பியனை வீழ்த்தி டேபிள் டாப்க்கு முன்னேறிய சென்னை!