ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 41வது போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இரு அணிகளும் தற்போது வலுவாக உள்ளதால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒருமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.


அதிகபட்ச ரன்கள் : 


இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டியில் 1 போட்டியில் கொல்கத்தா அணி 1 முறையும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரின் முதல் பாதியில் இரு அணிகளும் மோதிய ஒரு போட்டியில் டெல்லி அணியே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 7 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்து 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த 6 போட்டியிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.




இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டியில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி சார்பில் நிதிஷ்ராணா 81 ரன்களை குவித்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் கொல்கத்தா அணிக்கு எதிராக டேவிட் வார்னர் அதிகபட்சமாக 107 ரன்களை குவித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 392 ரன்களை குவித்துள்ளார். டெல்லி அணிக்காக கொல்கத்தா அணிக்கு எதிராக கவுதம் கம்பீர் அதிகபட்சமாக 569 ரன்களை குவித்துள்ளார். கவுதம் கம்பீர் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக விக்கெட்டுகள் : 


கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெல்லி அணி சார்பில் கொல்கத்தா அணிக்கு எதிராக உமேஷ் யாதவ் 21 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், டெல்லி அணி சார்பில் சிறந்த பந்துவீச்சாக கொல்கத்தாவிற்கு எதிராக அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.





டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 210 ரன்களை குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணி அதிகபட்சமாக ஒரு போட்டியில் 228 ரன்களை குவித்துள்ளது. டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி குறைந்தபட்சமாக 97 ரன்களையும், கொல்கத்தா அணிக்கு எதிராக டெல்லி அணி குறைந்தபட்சமாக 98 ரன்களையும் எடுத்துள்ளது.