கொரோனா பரவலை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், மும்பையை தோற்கடித்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து, இன்று இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.


ஏற்கனவே, இந்த ஐபிஎல் சீசனின் முதல் சந்திப்பில், 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்று பெங்களூரு அணி போட்டியை கைப்பற்றியது. புள்ளிப்பட்டியலில் பெங்களூரு மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா ஏழாவது இடத்தில் உள்ளது. இதனால், இனி வரும் போட்டிகள் கொல்கத்தா அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளதால், வெற்றியை ஈட்ட இரு அணிகளும் கடுமையாக போட்டியிடும். ஐபிஎல் வரலாற்றில், இதுவரை இரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா 15 முறையும், பெங்களூரு 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 






இந்த ஐபிஎல் போட்டி, விராட் கோலி விளையாட இருக்கும் 200-வது ஐபிஎல் போட்டி. அதுமட்டுமின்றி, விராட் கோலி இந்த ஐ.பி.எல். தொடருடன் பெங்களூர் அணியில் இருந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நேற்று அறிவித்த நிலையில், இன்று பெங்களூர் அணி களமிறங்குகிறது. இதனால், மைதானத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக ரசிகர்களின் கரகோஷம் ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலியுடன் பெங்களூர் அணியில் ஏபி டிவிலியர்ஸ், தேவ்தத் படிக்கல், சாஹல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






அதேபோல, கொல்கத்தா அணியும் கடந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் கேப்டன் இயான் மோர்கன், ரஸல், தினேஷ் கார்த்திக், பெர்குசன், பாட் கமின்ஸ், சுப்மன் கில், சுனில் நரேன், ராகுல் திரிபாதி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்ககப்படுகிறது.


மேலும், இந்தப் போட்டியில் ஆர்சிபி வழக்கமாக இருக்கும் சிவப்பு நிற ஜெர்ஸிக்கு பதிலாக ப்ளூ ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது. ஆர்சிபி அணி எப்போதும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடும்.






அந்தவகையில் இம்முறை பச்சை நிற ஜெர்ஸிக்கு பதிலாக நில நிற ஜெர்ஸியில் ஒரு போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வரும் வருமானம் உள்ளிட்டவற்றை மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் கொடுக்கப்படும் என்று ஆர்சிபி தரப்பில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருஞ்தொற்று காலத்தில் பிபிஇ கிட் அணிந்து அவர்கள் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் இந்த நில நிற ஜெர்ஸியை ஆர்சிபி அணி அணிந்து விளையாட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இரு அணி வீரர்கள் உத்தேச பட்டியல்:


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: இயன் மார்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, சுபம் கில், ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ரஸல், சுனில் நரன், லாக்கி ஃபெர்குசன், நாகர்கோட்டி, வருண் சக்கிரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா


பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்: விராட் கோலி (கேப்டன்), படிக்கல், படிடார, க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சபாஸ் அகமது, ஜேமிசன், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சிராஜ், சாஹல்