2021 ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கிவிட்டது. முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடங்களில் நிறைவு செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. 


ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிஃபையர் 2 போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. குவாலிஃபையர் 2 போட்டி, வரும் அக்டோபர் 13-ம் தேதி ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அக்டோபர் 15-ம் தேதி துபாயில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கும். 


பெங்களூரு அணியைப் பொருத்தவரை, முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த சீசன்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனோடு கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகி கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளதால், இந்த முறை “ஈ சாலா கப் நம்தே”-ஐ உறுதி செய்துவிடும் முனைப்பில் ஆர்சிபி களமிறங்கும். 2020 சீசனின் எலிமினேட்டர் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத் தழுவிய பெங்களூரு, இந்த வாய்ப்பை நழுவவிடாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படிக்கல், கோலி, மேக்ஸ்வெல், பரத் என பேட்டிங் பக்கத்தில் ஆர்சிபி வலுவாகவே உள்ளது. இனி, ஏபிடியும் அதிரடி காட்டினால், பெங்களூரு அணிக்கு சாதகமான பேட்டிங் அமையும். 


கொல்கத்தா அணியைப் பொருத்தவரை, இந்த சீசனின் இரண்டாம் பாதி போட்டிகளில் எழுச்சி கண்டது. கொல்கத்தாவுக்கு பேட்டிங், பெளலிங் என இரண்டுமே ப்ளஸ். முதல் பாதியில் சொதப்பிய ஒரு அணி, இரண்டாம் பாதியில் போட்டிகளை வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. திரிபாதி, வெங்கடேஷ் ஐயர், நரேன், வருண், ஃபெர்குசன் என கொல்கத்தாவின் துருப்புச் சீட்டாக நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரண்டு முறை சாம்பியன்ஸ், 6 முறை ப்ளே ஆஃப் என ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றான கொல்கத்தா, இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.


ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை, 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா 16 முறையும், பெங்களூரு 13 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் ஷார்ஜாவில் விளையாடிய இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. அதே போல, நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளும் சந்தித்துகொண்ட இரண்டு போட்டிகளில், தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 


டாஸ் பொருத்தவரை, முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா 7 முறையும், பெங்களூரு 3 முறையும், சேஸிங் ரெக்கார்டுப்படி பெங்களூரு 10 முறையும், கொல்கத்தா 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.