ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  சென்னை அணியின் பேட்டிங்கை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு ப்ளிசி ஜோடியில் டுப்ளிசிஸ் நிதானமாக ஆட, ருதுராஜ் அதிரடி காட்டினார்.


ஷகிப் அல் ஹசன் வீசிய மூன்றாவது ஓவரில் பாப் டுப்ளிசிசை அவுட்டாக்குவதற்கு கிடைத்த அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். அந்த வாய்ப்பை நழுவவிட்டதற்காக தினேஷ் கார்த்திக்க நிச்சயம் பின்னர் வருத்தப்பட்டிருப்பார். ருதுராஜ் 24 ரன்கள் எடுத்தபோது நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். பவர்ப்ளேவில் சென்னை அணி 50 ரன்களை அடித்தது.




சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிய ருதுராஜ் சுனில் நரைன் பந்தில் 32 ரன்னில் அவுட்டானர். அடுத்த விக்கெட்டிற்கு களமிறங்கிய உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாகவே ஆடினார். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 80 ரன்களை கடந்தது. பாப் டுப்ளிசிஸ் பெர்குசன் பந்தில் சிக்ஸர் அடித்து நடப்பு தொடரில் தனது 6வது அரைசதத்தை நிறைவு செய்தார்.


11.3 ஓவர்களில் சென்னை 100 ரன்களை கடந்தது. உத்தப்பா- பாப் டுப்ளிசிஸ் ஜோடி 26 பந்தில் 50 ரன்களை குவித்தது. சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிய உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்களை எடுத்தது.




கடைசி 5 ஓவர்கள் மட்டும் இருந்ததால் பாப் டுப்ளிசிஸ் -மொயின் ஜோடி அதிரடியில் இறங்கினார். ஷிவம் மாவி கடைசி ஓவரை சிறப்பாக வீசி, கடைசி பந்தில் பாப் டுப்ளிசிசையும் அவுட்டாக்கினார். பாப் டுப்ளிசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 86 ரன்களை குவித்தார். சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பெர்குசன் 4 ஓவர்கள் வீசி 56 ரன்களை வாரி வழங்கினார்.


193 ரன்கள் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய சுப்மன் கில் முதல் பந்திலே பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் அய்யர் அளித்த எளிதான கேட்ச்சை விக்கெட் கீப்பர் தோனி கோட்டைவிட்டார். சுப்மன்கில் அளித்த கடினமான கேட்ச்சை ஷர்துல் தாக்கூரும் கோட்டைவிட்டார். இருவரும் பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசியதால் கொல்கத்தா அணி 6வது ஓவரில் 50 ரன்களை கடந்தது.




பவர்ப்ளேவிற்கு பிறகு இருவரும் பவுண்டரிகளை மட்டும் அடிக்காமல் சிங்கிள்களாக ரன்களை எடுத்தனர். ப்ராவோ வீசிய பந்தில் சுப்மன்கில் அடித்த ஷாட் கேமரா வயர் மீது பட்டு கீழே விழுந்து ஷர்துல் தாக்கூர் கேட்ச் பிடித்தார். ஆனால், அதை அம்பயர் நாட் அவுட் என்று அறிவித்தார்.


ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்திலே ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன்கில் நிதானமாக ஆட, வெங்டேஷ் அதிரடியாக ஆடினார். அவர் 31 பந்தில்  5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 50 ரன்களை அடித்தார். அவர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே நிதிஷ் ராணா ரன் ஏதுமின்றி வெளியேறினார்.




இதையடுத்து, கேப்டன் மோர்கனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன்கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தவுடனே தீபக் சாஹர் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலே சிக்ஸரை விளாசினார். ஆனால், அவரது அதிரடி நீண்டநேரம் நீடிக்கவில்லை. ஜடேஜா வீசிய 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் அம்பத்தி ராயுடுவிடம் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறிய அதே ஓவரில் ஷகிப் அல் ஹசன் டக் அவுட்டாகி வெளியேறினார்.


இதனால், கொல்கத்தாவின் வெற்றிக்கு 30 பந்தில் 73 ரன்கள் தேவைப்பட்டது. கொல்கத்தாவின் வெற்றிக்காக காயமடைந்த திரிபாதி – மோர்கன் ஜோடி சேர்ந்தனர். ஆனால், ராகுல் திரிபாதி ஷர்தல் தாக்கூர் பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் சென்னையின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. பின்னர், முற்றிலும் பார்மிலே இல்லாத கொல்கத்தா கேப்டன் மோர்கனை தீபக் சாஹர் அற்புதமான கேட்ச்சால் 4 ரன்களில் வெளியேற்றினார்.  




9வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷிவம் மாவி ப்ராவோ பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ப்ராவோ வீசிய கடைசி ஓவரில் கொல்கத்தா அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக கைப்பற்றியது. 9 முறை ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறி 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.