ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் துபாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, சென்னை அணியின் வலுவான தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டு ப்ளிசியும் ஆட்டத்தை தொடங்கினர். கொல்கத்தா அணிக்காக முதல் ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார். ஷகிப் அல் ஹசன் வீசிய மூன்றாவது ஓவரில் பாப் டுப்ளிசிசை அவுட்டாக்குவதற்கு கிடைத்த அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டார். பாப் டுப்ளிசிஸ் நிதானமாக ஆட மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார்.
இந்த போட்டியில் 24 ரன்கள் எடுத்தபோது ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுலிடம் இருந்து தட்டிப்பறித்து, ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். பவர்ப்ளேவில் சென்னை அணி 50 ரன்களை அடித்தது. சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ருதுராஜ் சுனில் நரைன் பந்தில் 32 ரன்னில் ஷிவம் மாவியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த உத்தப்பாவும், பாப் டுப்ளிசிசும் அதிரடியாக ஆடினர். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 80 ரன்களை கடந்தது.
சென்னை அணிக்காக தொடர்ந்து நிலையாக ரன்களை சேர்த்து வரும் பாப் டுப்ளிசிஸ் பெர்குசன் பந்தில் சிக்ஸர் அடித்து நடப்பு தொடரில் தனது 6வது அரைசதத்தை அடித்தார். 11.3 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. உத்தப்பாவும், பாப் டுப்ளிசிஸ் ஜோடி 26 பந்தில் 50 ரன்களை குவித்தது. சென்னை அணிக்காக அதிரடியாக ஆடிய உத்தப்பா 15 பந்தில் 3 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்களை எடுத்தது.
ஆனாலும், கடைசி 5 ஓவர்கள் மட்டும் இருந்ததால் பாப் டுப்ளிசிஸ் அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மொயின் அலியும் அதிரடியில் இறங்கினார். பெர்குசனின் 4 ஓவர்களில் சென்னை வீரர்கள் அதிரடியாக ஆடி 56 ரன்களை குவித்தனர். 18வது ஓவரிலே சென்னை அணி 170 ரன்களை கடந்ததால் கடைசி இரண்டு ஓவரில் பாப் டுப்ளிசிஸ், மொயின் அலியும் அதிரடியாக ஆடினர். ஷிவம் மாவி வீசிய கடைசி ஓவரை சிறப்பாக வீசி, கடைசி பந்தில் பாப் டுப்ளிசிசையும் அவுட்டாக்கினார். பாப் டுப்ளிசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 86 ரன்களை குவித்தார்.
2012ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த போட்டியில் கொல்கத்தாவிற்கு 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மூன்று விக்கெட்டிற்கான பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.