ஐ.பி.எல். தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரம எதிரியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருப்பது அனைவரும் அறிந்ததே. மும்பை இந்தியன்ஸ் அணியைப் போலவே ஐ.பி.எல். தொடர்களில் சென்னை அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் மற்றொரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கவுதம் கம்பீர் கொல்கத்தாவின் கேப்டனாக இருந்தபோது சென்னை அணிக்கு கடும் குடைச்சலை அளித்து வந்தது.


2012ம் ஆண்டிற்கு பிறகு ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல்முறை ஆகும். 2012ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டியில் களமிறங்கியது.




தனது பிரதான மைதானத்தில் களமிறங்கிய தோனியே டாஸ் வென்றார். டாஸ் வென்ற அவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு மைக்கேல் ஹஸ்ஸியும், முரளி விஜயும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டாக முரளி விஜய் 32 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்களுடன் வெளியேறினார்.


இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா மைதானத்தில்வாணவேடிக்கை காட்டினார். இதனால், சென்னையின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மறுமுனையில் ஹஸ்ஸி 43 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவரில் 38 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 73 ரன்கள் குவித்து ரெய்னா வெளியேறினார். தோனி ஆட்டமிழக்காமல் 9 பந்தில் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது.




191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹில்பென்ஹாஸ் வீசிய முதல் ஓவரிலே கொல்கத்தா கேப்டன் கம்பீர் 2 ரன்களில் வெளியேறினார். இதனால், கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் மன்வீந்தர் பிஸ்லாவும், ஜேக் காலீசும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர்.


மன்வீந்தர் பிஸ்லா 48 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 89 ரன்கள் குவித்து மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லக்ஷ்மி சுக்லா 3 ரன்னிலும், யூசுப்பதான் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த காலீசும் 49 பந்தில் 7 பவுண்டரி  1 சிக்ஸருடன் 69 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கொல்கத்தாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




ட்வெய்ன் ப்ராவோ வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் மனோஜ் திவாரி ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன்னும் எடுத்தனர். மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் மனோஜ் திவாரி அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்து கொல்கத்தாவிற்கு முதல் ஐ.பி.எல். கோப்பையை உறுதி செய்தார். இதனால், ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் சென்னையின் ஹாட்ரிக் கனவை கொல்கத்தா தகர்த்தது. ஆட்டநாயகனாக பிஸ்லா தேர்வு செய்யப்பட்டார்.


சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். இதனால், கொல்கத்தா அணியை சென்னை அணி பழிதீர்க்குமா என்று எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.