2021 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் முதல் இரண்டு அணிகளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதவை தொடர்ந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், நான்காவது இடத்திற்காக கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகளில் இரண்டு அணிகளுக்கு புள்ளிப்பட்டியலின் டாப் இரண்டு இடத்தில் நிறைவு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற இருக்கும் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும், தலா 12 போட்டிகளில் விளையாடி தலா 9 போட்டிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளன.
ஐபிஎல் தொடரில் இதுவரை:
இதுவரை 24 முறை சென்னை, டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற இருக்கும் துபாய் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இந்த போட்டியில், டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில், இதற்கு முன்பு இரு அணிகளும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 188 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை சேஸ் செய்த களமிறங்கிய டெல்லி, 18.4 ஓவரில் இலக்கை எட்டி போட்டியை வென்றது. இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லியை வீழ்த்தி 1-1 என இந்த சீசன் ஹெட் -டு - ஹெட் மோதலை சமன் செய்து, புள்ளிப்பட்டியலில்தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் முனைப்பில் சென்னை அணி களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுவரை, முதலில் பேட்டிங் செய்து வெற்றியை ஈட்டியதில், 9 முறை சென்னைக்கும் 3 முறை டெல்லி அணிக்கும் சாதகமாக இருந்துள்ளது. சேஸிங்கை பொருத்தவரை, இரு அணிகளும் தலா 6 முறை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளன.
யார் ஆதிக்கம்?
இரு அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகளே மீதமிருக்கும் நிலையில், டாப் இடத்தில் நிறைவு செய்து குவாலிஃபையரில் விளையாடி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கும். கடைசியாக சென்னை அணி விளையாடிய போட்டியில்,189 ரன்கள் அடித்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடியாக சேஸ் செய்து போட்டியை வென்றது. டெல்லியைப் பொருத்தவரை, நடப்பு சாம்பியன்ஸ் மும்பையை வீழ்த்தி அசுர பலத்துடன் களத்தில் இருக்கிறது. இதனால், இன்று நடைபெற இருக்கும் போட்டி, கிட்டத்தட்ட ஒரு ப்ளே ஆஃப் அல்லது இறுதிப்போட்டியை போன்றதொரு ஃபீல் தரும் என்பதில் சந்தேகமில்லை.