துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டிக்கு முதலில் செல்வது யார் என்பதை தீர்மானிக்கும் குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி 2 பந்துகள் மீதம் வைத்து சென்னையை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
போட்டி நிறைவு பெற்ற பிறகு எம்.எஸ்.தோனி அளித்த பே்டடியில், “ இது ஒரு முக்கியமான இன்னிங்ஸ். அவர்கள் மிகப்பெரிய பவுண்டரிகளை நன்றாக அடித்தனர். இந்த தொடரில் நான் அதிகமாக எதையும் செய்யவில்லை. வலைப்பயிற்சியில் நன்றாக பேட் செய்திருந்தால், பந்துவீச்சாளர் எங்கே பந்தை வீசுவார், என்ன விதத்தில் வீசுவார் என்று தெரியும்.
தீபக் சாஹர் எங்களின் 9வது பேட்ஸ்மேனாக இருந்தார். ஷர்துல் தாக்கூரும் சமீபத்தில் பேட்டிங் செய்கிறார். அவரால் தீபக் சாஹருடன் பங்களிப்பு செய்ய முடியும். பேட்ஸ்மேன் உள்ளே செல்லும்போது முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பலமா? அல்லது வேண்டாமா? என்று இரு மன நிலையில் இருப்பார். ஆனால், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் முதல் பந்தில் இருந்தே பவுண்டரி அடிக்க முயற்சிப்பார்கள். அவர்கள் ஒன்றிரண்டு ஷாட்கள் ஆடினாலே ஆட்டத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் அது 15 முதல் 20 ரன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தும். ருதுராஜ் நல்ல திறமையான ஆட்டக்காரர். கடந்த முறை தகுதி பெறாதது மிகவும் கடினமாக இருந்தது. அதிகளவு உணர்வுப்பூர்வமாக இருந்தது. துணையாக இருந்த அனைவருக்கும் இதில் பங்குண்டு.”
இவ்வாறு அவர் பேசினார்.