இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரிமியர் லீக்தான். இந்த லீக் கிரிக்கெட் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இம்முறை 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை நடைபெற்ற 16 லீக் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்திய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது. மற்ற அணிகள் அனைத்தும் இணைந்து 6 கோப்பைகளை வென்றுள்ளது. மும்பை மற்றும் சென்னை அணிகள் மீது வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்பை விடவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதற்கு காரணம் இரு அணிகளின் கேப்டன்கள்தான். மும்பை அணி தனக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்துள்ளது. சென்னை அணியின் கேப்டனாக உள்ள தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என கூறப்படும் நிலையில் அவருக்குப் பின் யார் சென்னை அணியின் கேப்டன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ரோகித் சர்மா இந்த ஐந்து கோப்பைகள் கேப்டனாக வென்றது மட்டும் இல்லாமல் வீரராக ஒரு கோப்பையை வென்றுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 6 கோப்பைகள் வென்ற வீரர்களில்  ரோகித் சர்மா பெயர்தான் முதலில் இருக்கும். 


ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐபிஎல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக விரிவான ரீவைண்ட் இந்த தொகுப்பில் காணலாம். 




2009ஆம் ஆண்டு ஐபிஎல்


ஐபிஎல் இரண்டாவது சீசன் கோப்பையை டெக்கான் சார்ஜ்சர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 143 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டினை இழந்து 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியுடன் கோப்பையை வென்றது.  இந்த சீசனில் முதல் சீசனில் களமிறங்கிய 8 அணிகள் அப்படியே களமிறங்கின. மொத்தம் 56 லீக் போட்டிகளும் அதன் பின்னர் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் 59 போட்டிகள் நடைபெற்றது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனிலும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக அரையிறுதிக்கும், அரையிறுதில் வென்ற அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றன. இந்தியாவில் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இம்முறை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.




ஸ்டார் ப்ளேயர்கள்


இந்த சீசனின் ஸ்டார் ப்ளேயர் விருது டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிரிஸ்ட்க்கு வழங்கப்பட்டது.


2009ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனுக்கு வழங்கப்பட்டது.  மேத்யூ ஹைடன் 12 போட்டிகளில் விளையாடி, 52 சராசரியுடனும் 144.81 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தம் 572 ரன்கள் குவித்தார். 


ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளருக்கு வழங்கப்படும் ஊதா நிறத் தொப்பி கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய ஆர்.பி. சிங்கிற்கு வழங்கப்பட்டது.  வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி. சிங்  23 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 


இரண்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் என்றால் அது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட கெவின் பீட்டர்சன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட ஆண்ட்ரூ ஃபிலிண்டாஃப்பும்தான். இவர்கள் இருவரும் ரூபாய் 7.5 கோடிக்கு வாங்கப்பட்டனர். 


2009 ஐபிஎல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிரிஸ்ட் அதிக சிக்ஸர்கள் விளாசினார். இவர் 16 போட்டிகளில் விளையாடி 29 சிக்ஸர்கள் விளாசி வானவேடிக்கை காட்டினார். 




இந்த சீசனில் அதிக பவுண்டரிகள் விளாசிய வீரர் என்றால் அது அரஞ்சு தொப்பியை வென்ற சென்னை அணியின் மேத்யூ ஹைடன் தான். இவர் மொத்தம் 60 பவுண்டரிகள் விளாசினார். 


இந்த சீசனில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்றால் அது டெல்லி அணியின் வீரர் ஏபி டிவிலியர்ஸ் தான். இவர் 15 போட்டிகளில் விளையாடி 13 கேட்சுகள் பிடித்தார். 


மேலும் இந்த சீசனில் மொத்தமாகவே இரண்டு சதங்கள் மட்டுமே விளாசப்பட்டது. அதுவும் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக பெங்களூரு அணியின் மனீஸ் பாண்டே 114 ரன்கள் சேர்த்ததுதான்.  பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த மனீஷ் பாண்டே டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் எதிராக 73 பந்துகளில் 10 பவுண்டரி 4 சிக்ஸர்கள் விளாசி 114 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். 


கவனம் ஈர்த்த போட்டிகள்


ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்றால் அது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற லீக் போட்டி தான். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் ராஜஸ்தான் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


அதேபோல் இந்த சீசனில் மிகக் குறைந்த ஸ்கோர் குவித்த அணி என்றால் அது பஞ்சாப் கிங்ஸ் அணிதான். அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சினால் பஞ்சாப் அணி  8 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் மட்டுமே குவித்தது. 


சூப்பர் ஓவர் மேட்ச்


அதேபோல் இந்த சீசனில் ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் சூப்பர் ஓவர் முறையில் முடிவு எட்டப்பட்டது. லீக் போட்டியில் ராஜ்ஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்ததால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டி முடிவு சூப்பர் ஓவர் முறையில் எட்டப்பட்டது. அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.