ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 202 ரன்களை நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.


ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17-ல் இன்று (மே 1) 50 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி 25 ரன்களை எடுத்தது. அப்போது அபிஷேக் சர்மா தன்னுடைய விக்கெட்டை 12 ரன்களில் பறிகொடுத்தார். 


அரைசதம் விளாசிய  ட்ராவிஸ் ஹெட் - நிதிஷ் ரெட்டி:


பின்னர் வந்த  அன்மோல்பிரீத் சிங் 5 ரன்களில் விக்கெட் ஆகி நடையைக் கட்டினார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கினார் நிதிஷ் ரெட்டி. நிதனமாக ரன்களை சேர்த்து வந்த ஹைதராபாத் அணிக்கு இவர்களது ஜோடி வேகமாக ரன்களை சேர்த்துகொடுத்தது. இதனிடையே  அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் தன்னுடைய ஐ.பி.எல் அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 44 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என 58 ரன்கள் எடுத்தார். அப்போது ஆவேஷ் கான் வீசிய பந்தில் கிளின் போல்ட் ஆகி நடையைக் கட்டினார் ஹெட். பின்னர் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த நிதிஷ் ரெட்டியுடன் ஹென்ரிச் கிளாசென் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.


மறுபுறம் 30 பந்துகளில் அரைசத்தை பதிவு செய்தார் நிதிஷ் ரெட்டி. அதேபோல் கிளாசென்னும் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை களத்தில் நின்ற நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 76 ரன்கள் குவித்தார். கிளாசென் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.