17வது ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது என்றே கூறவேண்டும். இரு அணிகள் தங்களது ப்ளேஆஃப் வாய்ப்பினை கிட்டத்தட்ட இழந்த நிலையில் உள்ளது. அதேபோல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் இப்போதைக்கு ராஜஸ்தான் அணிக்கு மட்டும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உள்ளது. ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தனது ப்ளே ஆஃப் வாய்ப்பினை உறுதிசெய்துவிடும். 


இந்நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாக இருந்தாலும் சென்னை அணியின் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. ஆமாம் சென்னை அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளர்களில் ஒருவாரன முஸ்தஃபிசூர் ரஹ்மான் அயர்லாந்து அணியுடனான டி20 தொடரில் விளையாட தனது சொந்த அணியான வங்கதேச அணியுடன் இணையவுள்ளார். அதேநேரத்தில் சென்னை அணியின் கீ-பவுலர்களில் ஒருவராக கருதப்படும் தீபக் சஹார் காயத்தால்  நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அதேபோல் சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட்டுகளை அள்ளிக் கொடுக்கும் தேஸ்பாண்டேவுக்கும் உடல்நிலை சரியில்லை என கூறப்படுகின்றது. இதனால்தான் அவர் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என கூறப்படுகின்றது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் ப்ளேஆஃப் சுற்றுகளில் விளையாடமாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால் சென்னை அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டால் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி விளையாடமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. 




சென்னை அணியின் பவுலிங் ஆர்டரின் நிலை இப்படி ஆகிவிட்டதால், சென்னை அணி அடுத்துவரும் போட்டிகளில் என்னமாதிரியான விளைவுகளை எதிர்கொள்ளப்போகின்றது என்பது கேள்விக்குறியாக உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தனது பவுலிங் ஆர்டரை மாற்றிப்பார்த்தது. அதாவது, பத்திரானாவை களமிறக்காமல் ரிச்சர்ட் க்ளீசனை களமிறக்கிப் பார்த்தது. இதற்கான காரணமாக பார்க்கப்படுவது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் அணியில் இருந்து விலகிய பின்னர் யாரைப் பயன்படுத்தலாம் என்ற கேள்விக்கு சென்னை அணியின் தேர்வாக ரிச்சர்ட் க்ளீசன் இருந்துள்ளார். இவரும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் புதிய பந்தில் ஆட்டத்தின் 4வது ஓவரில் விக்கெட் வீழ்த்தியிருந்தார். மேலும் இவர் இந்த ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி, 30 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். 


சென்னை அணிக்கு உள்ள வாய்ப்புகள் 


சென்னை அணி எதிர்வரும் 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதன் ப்ளேஆஃப் சுற்று உறுதியாகிவிடும். ஆனால் சென்னை அணிக்கு மீதமுள்ள 4 லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் சென்னையில் விளையாடவுள்ளது. இது சென்னை அணிக்கு சவாலாக அமைய வாய்ப்புள்ளது.  இப்படி நெருக்கடியான நிலையில் களமிறங்கும் சென்னை அணியின் பவுலிங் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 


எதிர்வரும் போட்டிகளில் சென்னை அணிக்கு உள்ள பவுலர்கள் என்றால், அது பத்திரானா, தேஸ்பாண்டே, ஷர்துல் தக்கூர், க்ளீசன், ரவீந்திர ஜடேஜா, மதீஷா திக்‌ஷனா, மிட்ஷெல் சாண்ட்னர் மற்றும் சிவம் துபே. இந்த பவுலிங் ஆர்டரை வைத்துக்கொண்டு சென்னை அணியால் எதிரணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கு களம்தான் பதில் அளிக்கும்.


சென்னை அணி அடுத்துவரும் நான்கு போட்டிகளில் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.